ஜொன்காம்: நேற்று அதிகாலை பிரான்சுக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான நட்புமுறை காற்பந்து ஆட்டம் ஒன்றில் மாற்று ஆட்டக் காரராக இரண்டாம் பாதி ஆட்டத்தில் களமிறக்கப்பட்ட பிரான்சின் கிலியான் எம்பாப்பே அந்நாட்டைக் காப்பாற்றினார். ஆட்டம் முடியும் தறுவாயில், 86ஆம் நிமிடத்திலும் ஆட்டத்தின் கடைசி நிமிடத்திலும், இரு கோல்கள் போட்டு இறுதியில் பிரான்சுக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையிலான இந்தப் போட்டி 2-2 என சமநிலை காண எம்பாப்பே உதவினார்.
சொந்த மண்ணில் ஐஸ்லாந்தை எதிர்கொண்ட பிரான்ஸ், கோல் போட பல வாய்ப்புகளைப் பெற்ற போதிலும் முன்னைய இரு ஆட்டங்களில் சுவிட்சர்லாந்திடமும் பெல்ஜியத்திடமும் முறையே 6=0, 3=0 என்று தொடர் தோல்விகளைச் சந்தித்த ஐஸ்லாந்து எப்படியோ பிரான்சின் இடைவிடாத தாக்கு தல்களைச் சமாளித்தது.
பின்னர், முதல் பாதி ஆட்டத்தி லேயே ஐஸ்லாந்தின் ஆல்ஃபிரட் ஃபின்பொகாசான் பிரான்ஸ் நாட்டுத் தற்காப்பு ஆட்டக்காரரிட மிருந்து பந்தைத் தட்டிப் பறித்து சக ஐஸ்லாந்து வீரரான ஜர்நாசன் என்பவரிடம் கொடுத்து தமது நாட்டின் முதல் கோலை பெற்றுத் தந்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட ஐஸ்லாந்து நிர்வாகியான எரிக் ஹாம்ரென் என்பவரின் பயிற்சியில் விளையாடிய ஐஸ்லாந்துக் குழுவின் முதல் கோல் இதுதான். பின்னர், இரண்டாம் பாதி ஆட்டம் தொடங்கிய 13ஆம் நிமிடத்தில் காரி அர்நாசன் என்பவர் ஐஸ்லாந்தின் இரண்டாம் கோலை போட பிரான்ஸ் உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அந்நாட்டின் நான்காவது கோலை போட்டு குரோஷியாவை 4-2 என வெல்ல உதவிய எம்பாப்பே களமிறக்கப்பட் டார்.
ஐஸ்லாந்து வீரர்கள் தங்கள் கோல் வலையை நோக்கி பந்து வந்தபோதெல்லாம் முழு மூச்சுடன் தடுத்தபோதிலும் ஆட்டத்தின் 86ஆம் நிமிடத்தில் எம்பாப்பே அடித்த பந்தை ஐஸ்லாந்து கோல் காப்பாளரால் பிடிக்க முடியாமல் போனது. ஐஸ்லாந்து கோல்காப் பாளர் தடுத்த பந்து சக ஐஸ்லாந்து வீரரின் கால் பட்டு ஐஸ்லாந்து கோல் வலைக்குள் சென்றது. பின்னர், ஆட்டம் முடிவுறும் போது ஐஸ்லாந்து பெனால்டி எல்லைக்குள் பந்தை அந்நாட்டு வீரர் ஒருவர் கையாண்டதால் கிடைத்த பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி எம்பாப்பே தமது இரண்டாவது கோலையும் போட்டு சொந்த மண்ணில் விளையாடும் பிரான்சை தோல்வியின் விளிம்பில் இருந்து காப்பாற்றினார்.
ஐஸ்லாந்துடன் நட்புமுறை காற்பந்தாட்டம் ஒன்றில் பொருதியது பிரான்ஸ். நேற்று பிரான்சில் நடந்த அந்த ஆட்டத்தின் இரண்டாம் பாதி ஆட்டத்தில் களமிறக்கப்பட்ட பிரான்சின் கிலியான் எம்பாப்பே இரண்டு கோல்கள் போட்டு பிரான்ஸை தோல்வியில் இருந்து மீட்டார். படம்: ஏஎஃப்பி

