இந்தியாவுடனான கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை என்று வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் தெரிவித்துள்ளார். இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என்ற கணக்கில் வென்றது. தொடரில் தமது அணி அடைந்த தோல்விக்குப் பிறகு ஜேசன் செய்தியாளர்களிடம் பேசினார். "இந்தத் தொடரில் எங்களது பந்தடிப்பு மோசமாக இருந்தது. இந்தத் தோல்வியை ஜீரணிப்பது என்பதே சிரமமாக உள்ளது. நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால் இதை ஏற்றுக்கொள்வது மிகவும் கடினம். இந்தத் தோல்விக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறேன்," என்றார் அவர்.
"இந்தத் தோல்விக்கு வெஸ்ட் இண்டீசின் அணி வீரர்கள் அனைவருமே பொறுப்பு. வெற்றி காண்பதற்கான வழிகளை நாங்கள் தேடினோம். ஆனால் அதற்கான தீர்வு எங்களுக்குக் கிடைக்க வில்லை. இந்தத் தொடரின்போது ரோஸ்டன் சேஸ், ஷெளர்மான் லீவிஸ் ஆகியோர் தங்களது திறமைகளை அபாரமாக வெளிப் படுத்தினர்.
"இது ஒரு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. நாங்கள் எங்களது சிறந்த ஆட்டத்தை இங்கு வெளிப்படுத்தவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக பல தொடர்களில் சிறப்பாக விளையாடி நல்ல வெற்றிகளைப் பெற்றோம். ஆனால் இந்திய அணியானது தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அணியாகும். அந்த அணிக்கு ஈடுகொடுத்து நாங்கள் விளையாடவில்லை. இந்திய வீரர்கள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இது அவர் களுக்குச் சொந்த மைதானம் என்றாலும் அவர்களது ஆட்டத் திறன் அபாரம்.
"அதிக அளவு ஓட்டங்களைக் குவிக்க முடியவில்லை. சீரான ஆட்டத்தை நாங்கள் வெளிப் படுத்தாததால் தோல்வி கண் டோம்," என்றார் ஜேசன்.
வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர். படம்: ஊடகம்

