டென்மார்க்: சாய்னா வெற்றி

1 mins read
0f4af129-1c11-4f7b-9814-b1ff61fc36ca
-

ஓடென்சி: டென்மார்க் பொதுவிருது அனைத்துலக பூப்பந்துப் போட்டி ஒடென்சி நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. மொத்தம் ஐந்தரைக் கோடி ரூபாய் பரிசுத்தொகைக்கான இந்தப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்வோருக்கு ரூ.40 லட்சமும் 2வது இடத்தைப் பிடிப்போருக்கு ரூ.20 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப் படும். முதல் நாளான நேற்று முன்தினம் நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் நடந்த ஓர் ஆட்டத்தில் முன்னாள் வெற்றியாளர் இந்தியாவின் சாய்னா நேவால், செங் நகன் யூவை (ஹாங்காங்) எதிர்கொண்டார்.

முதல் இரு செட்டை இருவரும் தலா ஒன்று வீதம் கைப்பற்றிய நிலையில் கடைசி செட் ஆட்டம் விறுவிறுப்பாக நடந்தது. 20=20, 22=22 என்று வரை சமநிலை நீடித்தது. கடைசியில் செங் நகன் அடுத்தடுத்துப் பந்தை வெளியே அடித்துவிட, சாய்னாவின் வசம் வெற்றிக்கனி விழுந்தது. ஒரு மணி 21 நிமிடங்கள் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா 20=22, 21=17, 24=22 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாய்னா அடுத்து இரண்டாம் நிலை வீராங்கனையான அகானே யமாகுச்சியை (ஜப்பான்) சந்திக்கிறார்.