சுவென் கோரன் எரிக்சனை ஒப்பந்தம் செய்துள்ள பிலிப்பீன்ஸ் குழு

சுவென் கோரன் எரிக்சனை ஒப்பந்தம் செய்துள்ள பிலிப்பீன்ஸ் குழு

1 mins read

பிலிப்பீன்ஸ் காற்பந்துக் குழுவின் பயிற்றுவிப்பாளராக இங்கிலாந்தின் முன்னாள் நிர்வாகி சுவென் கோரன் எரிக்சன் ஒப்பந்தமாகியிருப்பதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழுக்குத் தகவல் கிடைத்துள்ளது. சுவீடனைச் சேர்ந்த 70 வயது எரிக்சன் பிலிப்பீன்ஸ் காற்பந்துக் குழுவுடன் ஆறு மாத ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஒப்பந்தத்தை நீட்டிக்கும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சுசுகி கிண்ணக் காற்பந்துப் போட்டி, அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டி ஆகியவற்றுக்கு பிலிப்பீன்ஸ் குழுவை எரிக்சன் தயார்படுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2001ஆம் ஆண்டிலிருந்து 2006ஆம் ஆண்டு வரை இங்கிலாந்தின் நிர்வாகியாக எரிக்சன் செயல்பட்டார். அவரது குழுவில் டேவிட் பெக்கம், வெயின் ரூனி, ஸ்டீவன் ஜெரார்ட் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றிருந்தனர்.

எரிக்சனின் தலைமையில் இங்கிலாந்து இரண்டு உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் களமிறங்கியது. எரிக்சனைப் பயிற்றுவிப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளது குறித்து பிலிப்பீன்ஸ் தேசிய காற்பந்துக் குழுவின் நிர்வாகம் மணிலாவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. "எரிக்சன் அதிக அனுபவம் உள்ள பயிற்றுவிப்பாளர். பிலிப்பீன்ஸ் காற்பந்துக் குழுவை அடுத்த நிலைக்கு அவரால் கொண்டு போக முடியும். 2010ஆம் ஆண்டில் நாங்கள் சுசுகி கிண்ணத்தின் அரையிறுதிக்குள் நுழைந்தோம். அன்றிலிருந்து கிண்ணத்தை வெல்லும் வேட்கையுடன் நாங்கள் இருக்கிறோம்," என்று பிலிப்பீன்ஸ் குழுவின் நிர்வாகி டான் பலாமி கூறினார்.