கொழும்பு: ஒருநாள் போட்டித் தொடரை 3=1 என்ற கணக்கில் கைப்பற்றிய இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இலங்கை அணிக்கு எதிரான ஒரே ஒரு டி20 போட்டியிலும் வென்று தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தியது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணிக்கு அற்புதத் தொடக்கம் தந்தார் ஜேசன் ராய். 36 பந்துகளில் ஆறு பவுண்டரி, நான்கு சிக்சருடன் அவர் 69 ஓட்டங் களை விளாசினார். பென் ஸ்டோக்ஸ் 26, மொயீன் அலி 27, ஜோ டென்லி 20 ஓட்டங்களை எடுக்க, 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து எட்டு விக்கெட் இழப்பிற்கு 187 ஓட்டங்களைக் குவித்தது.
இலக்கை விரட்டிய இலங்கை அணிக்குத் தலைவர் திசர் பெரேரா (57) தவிர மற்ற எவரும் பொறுப்பை உணர்ந்து ஆடவில்லை. அதனால் அந்த அணி 157 ஓட்டங்களில் ஆட்டமிழந்து, 30 ஓட்டங்களில் தோற்றது. சுழற்பந்து வீச்சில் அசத்தி நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் ஜோ டென்லி. ஆட்ட நாயகன் விருதை வென்ற அவர், "இதே உத்வேகத்துடன் செயல்பட்டு அடுத்து டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்க முயல்வேன்," என்றார்.

