ஓட்டங்களை வாரி வழங்கியதால் தோல்வி

2 mins read

புனே: கடைசி பத்து ஓவர்களில் அதிக ஓட்டங்களை விட்டுக்கொ டுத்ததே மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோற்றதற்கு முக்கியக் காரணம் என்று இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதி ரான ஐந்து போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற, 2வது ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இந்நிலையில், மூன்றாவது போட்டி நேற்று முன்தினம் புனேயில் நடை பெற்றது.

முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான புவனேஸ்வர் குமாரும் ஜஸ்பிரீத் பும்ராவும் இந்திய அணிக்குத் திரும்பினர். பூவா தலையாவில் வென்ற கோஹ்லி முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்கப் பந்தடிப்பாளர்களாக சந்திரபால் ஹேம்ராஜும் கைரன் பொவெலும் களமிறங்கினர். அவர்கள் இருவரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த அனுபவ வீரர் மார்லன் சாமு வேல்சும் ஒன்பது ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். இருப்பினும், கடந்த ஆட்டத்தில் இந்தியப் பந்து வீச்சாளர்களுக்குச் சிம்மசொப்பன மாக விளங்கிய ஷே ஹோப்- ‌ஷிம்ரன் ஹெட்மையர் இணை இம் முறையும் மிரட்டலாகத் திகழ்ந்தது.

ஹெட்மையர் 21 பந்துகளில் 37 ஓட்டங்களை விளாசினார். சதத்தை நெருங்கிய நிலையில் 95 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற் றத்துடன் வெளியேறினார் ஹோப். கடைசி நேரத்தில் ஆஷ்லி நர்ஸ் 22 பந்துகளில் 40 ஓட்டங்களைக் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 283 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணித் தரப்பில் பும்ரா நான்கு விக்கெட்டுகளைச் சாய்த்தார். அடுத்து பந்தடித்த இந்திய அணியில் தொடக்க வீரர் ரோகித் சர்மாவை எட்டு ஓட்டங்களில் வெளியேற்றினார் ஆஷ்லி நர்ஸ். ‌ஷிகர் தவான் (35) சற்று நம்பிக்கை தந்தபோதும் நிலைக்கத் தவறினார்.