மும்பை: இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் நடந்து முடிந்த பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் சுழற் பந்து வீச்சாளர் இடம்பெறாதது தனக்கு ஆச்ச ரியம் அளித்ததாக இந்திய அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளர் அனில் கும்ளே கூறியுள்ளார். பெர்த் நகரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி வீரர் அஸ்வின் விளையாடவில்லை. பெர்த் ஆடுகளம் வேகத்துக்குச் சாதகமாக இருக்கும் என்று கூறப்பட்டதால் இந்திய அணி நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது.
இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர் எவரும் அணியில் சேர்க்கப்படவில்லை. ஆனால், ஆஸ்திரேலிய அணி சுழற்பந்து வீச்சாளர் நேதன் லயனை அருமையாகப் பயன் படுத்தியது. அந்தப் போட்டியில் எட்டு விக்கெ ட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு அவர் உறுதுணையாக இருந்தார். இதனால் பெர்த் டெஸ்ட்டில் இந்திய அணி யில் ஒரு சுழற்பந்து வீச்சாளரையாவது சேர்த்திருக்க வேண்டும் என்ற கருத்து பரவலாக எழுந்தது. இந்நிலையில் கும்ளேயும் கருத்துரைத்துள்ளார்.

