மான்செஸ்டர்: மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக அலெக்சிஸ் சான்செசும் ரொமேலு லுக்காகுவும் களமிறங்க வேண்டுமென்றால் அவர்கள் இருவரும் நன்கு செயல்பட்டு தங்கள் தரத்தை நிரூபிக்க வேண்டும் என அக்குழுவின் இடைக்கால நிர்வாகி ஒலே குன்னார் சோல்சியார் தெரிவித்துள்ளார். முன்னாள் நிர்வாகி ஜோசே மொரின்யோ பதவியில் இருந்தபோது சான்செசுக்கும் லுக்காகுவுக்கும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில், இருவருக்கும் தாம் வழிகாட்டி வருவதாக சோல்சியார் கூறினார். ஆனால் இருவரும் கடுமையாக உழைத்தால் மட்டுமே களமிறங்க வாய்ப்பு கிடைக்கும் என்றார் அவர். காயம் காரணமாக சான்செஸ் பல ஆட்டங்களில் விளையாடாமல் இருக்கிறார். அவர் கடைசியாகக் கடந்த மாதம் கிரிஸ்டல் பேலசுக்கு எதிராக விளையாடினார். சோல்சியார் தலைமையிலான முதல் இரண்டு ஆட்டங்களில் லுக்காகு விளையாடவில்லை. ஆனால் சாஞ்சேசுடன் அவரும் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டார். இன்றிரவு மான்செஸ்டர் யுனைடெட், சௌத்ஹேம்டனுடன் மோதுகிறது. சோல்சியார் நிர்வாகி பதவி ஏற்றதை அடுத்து, யுனைடெட் வெற்றியின் பாதைக்குத் திரும்பியுள்ளது. இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற அக்குழுவின் வீரர்கள் முனைப்புடன் உள்ளனர்.
மான்செஸ்டர் யுனைடெட்டுக்காக மீண்டும் களமிறங்க அலெக்சிஸ் சான்செசும் (இடமிருந்து இரண்டாவது) ரொமேலு லுக்காகுவும் (வலது) முனைப்புடன் பயிற்சி செய்து வருகின்றனர். படம்: ராய்ட்டர்ஸ்

