செஞ்சூரியன்: தென்னாப்பிரிக்கா = பாகிஸ்தான் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடைபெற்றது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த பாகிஸ்தான் ஒலிவியரின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 181 ஓட்டங்களில் சுருண்டது. இதை அடுத்து, தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சைத் தொடங்கியது. பவுமா 53 ஓட்டங்களும் டி காக் 45 ஓட்டங்களும் ஸ்டெயின் 23 ஓட்டங்களும் அடிக்க தென்னாப்பிரிக்கா 223 ஓட்டங்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணி முதல் இன்னிங்சில் பாகிஸ்தானைவிட 42 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது. இந்த 42 ஓட்டங்கள் தென்னாப்பிரிக்காவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது.
42 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது. தொடக்க வீரர் இமாம் உல் ஹக் (57), மூன்றாவது வீரராகக் களம் இறங்கிய ஷான் மசூத் (65) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பாகிஸ்தான் 190 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அத்துடன் இரண்டாவது நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய ஒலிவியர் இரண்டாவது இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளைச் சாய்த்தார். ரபாடா 3 விக்கெட்டுகளையும் ஸ்டெயின் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.
148 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது பாகிஸ்தான். இதனால் தென்னாப்பிரிக்காவின் வெற்றிக்கு 149 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. நேற்று முன்தினம் மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்றது. ஆம்லா, டீன் எல்கர் அரைசதம் அடித்ததோடு அணி யை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். டீன் எல்கர் 50 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். டிபிரைன் (10), டு பிளஸ்ஸி (0) சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க ஆம்லா 63 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தென்னாப்பிரிக்கா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 151 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

