சொந்தமாக திடல் அமைத்துத் தந்த தந்தையின் கனவை நனவாக்கி பெருமை சேர்த்த பிரியா

சொந்தமாக திடல் அமைத்துத் தந்த தந்தையின் கனவை நனவாக்கி பெருமை சேர்த்த பிரியா

2 mins read
32065e0e-8d6e-454c-a148-c8d6e4057db8
-

ஜெய்ப்பூர்: விளையாட்டில் சாதித்து, நாட்டிற்குப் பெருமை தேடித் தர வேண்டும் என்ற தமது கனவு நனவாகாமல் போனதில் திரு சுரேந்திரா புனியாவிற்கு வருத்தம்தான். ஆனாலும் மனம் கலங்கிவிடாமல், தம்மால் முடியாமல் போனதைத் தம் பிள்ளைகளைக் கொண் டாவது சாதித்துவிட வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார். எழுத்தராக அரசாங்கப் பணிபுரியும் அவர் தமது சொத்துகளை விற்றார். அப்படியும் போதிய பணம் சேராததால் வங்கியில் கடன் பெற்றார். ஒருவாறு ரூ.22 லட்சத்தைத் திரட்டிய அவர், 2010ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத் தலைநகர் ஜெய்ப்பூர் அருகே 0.6 ஏக்கர் நிலத்தை வாங்கினார்.

"விளையாட்டு வளாகம் கட்டவேண்டும் என்பதே என் விருப்பமாக இருந்தது," என்றார் அவர். ஆனால், அவருடைய மகள் பிரியா புனியாவிற்கு (படம்) பேட்மிண்டன் விளையாட்டில் துளியும் ஆர்வமில்லை. பெரும்பாலான இந்தியர்களின் மனங்கவர்ந்த கிரிக்கெட் விளையாடவே அவருக்கும் ஆசை. அதைப் புரிந்துகொண்ட திரு சுரேந்திரா, தமது ஆசையைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு மகள் கேட்பதைச் செய்து தருவது எனத் தீர்மானித்தார். தாம் வாங்கிய இடத்தில் மகள் பிரியா கிரிக்கெட் பயிற்சி செய்ய ஏதுவாக முறையான ஆடுகளத்தை யும் வலைகளையும் அவர் ஏற்படுத்தித் தந்தார். அவற்றைப் பராமரிக்க மட்டும் மாதந்தோறும் 15,000 ரூபாயை அவர் செலவிட்டு வருகிறார். அவரது பல்லாண்டு காலப் போராட்டத்திற்கான பலன் இப்போது கிட்டிவிட்டது.

தற்போது 22 வயதை எட்டிவிட்ட பிரியா, 2019 பிப்ரவரி மாதம் நியூசிலாந்தில் டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணிக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளார் என்பதே அந்த நற்செய்தி. 2015ஆம் ஆண்டில் உள்ளூர் போட்டிகளில் சிறப் பாக ஆடி ஓட்டங்களைக் குவித்ததால் அப்போதே தேசிய அணியில் இடம் கிடைக்கும் என நம்பியதாகக் கூறினார் பிரியா. ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. அதில் பிரியாவிற்குச் சற்று ஏமாற்றம்தான். இருந்தாலும், தனக்கான நேரம் வரும் எனக் காத்திருந்ததாகக் குறிப்பிட்ட இவர், கடந்த இரு ஆண்டுகளாக டெல்லி உள்ளூர் போட்டிகளில் அதிக ஓட்டங்களைக் குவித்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். உள்ளூர் போட்டிகளில் இரு சதங்களை அடித்ததை அடுத்து இவருக்கு தேசிய அணியில் இடம் கிடைத்துள்ளது. "ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம் கிடைக்கும் என நினைத்தேன். ஆயினும் கிடைத்த வாய்ப்பைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு அனைத் துலக அளவிலும் சாதிப்பேன் என எதிர்பார்க்கிறேன்," என்றார் இவர்.