திசையெங்கும் சிக்சர்களை தெறிக்கவிட்ட திசர பெரேரா

திசையெங்கும் சிக்சர்களை தெறிக்கவிட்ட திசர பெரேரா

2 mins read
3cb6dadb-219c-47d6-8639-7c71d9f1e350
-

வெலிங்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி யில் வெற்றிபெற இலங்கை அணிக்கு இன்னும் 117 ஓட்டங் கள் தேவை. கைவசம் இரண்டு விக்கெட்டுகளே இருந்தன. ஆயினும், திசர பெரேரா தனி ஒருவனாக தன்னம்பிக்கையுடன் போராடியதைக் கண்டபோது இலங்கை அணி வென்றாலும் வியப்பதற்கில்லை எனும்படியாக இருந்தது. ஆனால், அதிர்ஷ்டம் நியூசிலாந்தின் பக்கமே இருந்தது. 21 ஓட்டங்களில் வெற்றி பெற்ற அந்த அணி, தொடரையும் 2=0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலில் பந்தடித்த நியூசி லாந்து அணியில் கோலின் மன்ரோ (87), ரோஸ் டெய்லர் (90), ஜேம்ஸ் நீஷம் (64) ஆகியோர் அதிரடியாக ஆடினர். இதனால் அந்த அணி 50 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 319 ஓட்டங் களைக் குவித்தது.

இலக்கை விரட்டிய இலங்கை அணி ஒரு கட்டத்தில் 128 ஓட் டங்களுக்கு ஏழு விக்கெட்டு களைப் பறிகொடுத்து தடுமாறி யது. இந்த நிலையில், அந்த அணிக்குப் பெரிதும் கைகொடுத் தார் திசர. வழக்கத்திற்கு மாறாக நியூசிலாந்து அணியின் களக் காப்பும் மோசமாக இருந்தது. ஆறு 'கேட்ச்' வாய்ப்புகளை அவர்கள் கோட்டைவிட்டனர். திசர 74 பந்துகளில் எட்டு பவுண்டரி, 13 சிக்சர் உட்பட 140 ஓட்டங்களை விளாசியபோதும் அது இலங்கை அணியின் வெற்றிக்குப் போதுமானதாக இல்லை. 20 பந்துகள் வீசப்பட வேண்டியிருந்த நிலையில் அந்த அணி 298 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து தோற்றுப்போனது. ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக சிக்சர் அடித்த இலங்கை வீரர் எனும் சாதனையை ஜெய சூர்யாவிடம் (11 சிக்சர்) இருந்து தட்டிப் பறித்தார் திசர. மூன்றாவது, கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்க இருக்கிறது. அதன்பின் 11ஆம் தேதி இவ்விரண்டு அணிகளும் ஒரே ஒரு டி20 போட்டியில் மோத உள்ளன.