லண்டன்: எஃப்ஏ கிண்ணக் காற்பந்து மூன்றாம் சுற்று ஆட்டத் தில் ஸ்பானிய ஆட்டக்காரர் ஃபெர்னாண்டோ லோரென்டே 'ஹாட்ரிக்' கோலடிக்க, டோட்டன் ஹம் ஹாட்ஸ்பர் குழு 7=0 என்ற கணக்கில் டிரான்மியர் ரோவர்ஸ் குழுவை நசுக்கியது. எட்டு மாற்றங்களுடன் ஸ்பர்ஸ் குழு இந்த ஆட்டத்தில் களம் இறங்கியது. நட்சத்திர ஆட்டக்கா ரர் கிறிஸ்டியன் எரிக்சன், கோல் காப்பாளர் ஹியூகோ லோரிஸ் ஆகியோருக்கும் ஓய்வு தரப்பட்டது. அதே நேரத்தில் அனைத்துலகப் போட்டிகளில் ஆடிய அனுபவம் கொண்ட எட்டு ஆட்டக்காரர்கள் குழுவில் இருந்தனர். நேற்றைய ஆட்டத்தில் குழுத் தலைவராகச் செயல்பட்ட டெலி அலி, தென் கொரியாவின் ஹியூங் மின் சோன் ஆகியோர் அதில் அடங்குவர்.
முதல் பாதியில் டிரான்மியர் குழுவின் தற்காப்பு அருமையாக இருந்தது. ஆனாலும் முற்பாதி ஆட்டம் முடிய ஐந்து நிமிடங்கள் இருந்தபோது ஸ்பர்ஸ் குழுவின் கோல் வேட்டையைத் தொடங்கி வைத்தார் தற்காப்பு ஆட்டக்காரர் செர்ஜ் ஓரியே. இரண்டாம் பாதியில் ஸ்பர்ஸ் குழு ஆட்டத்தை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. லோரென்டே மூன்று கோல்களை அடிக்க, ஓரியே தன் பங்கிற்கு இன்னொரு கோலையும் போட்டார். ஸ்பர்சின் கோல் மழையில் ஹியூங் மின் சோனின் பங்களிப்பும் இருந்தது. லோரென்டேவுக்குப் பதில் மாற்று வீரராகக் களமிறங்கிய ஹேரி கேன், 82வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் குழுவின் கடைசி கோலைப் போட்டார். இது ஸ்பர்சுக்காக அவர் அடித்த 159வது கோல். இதன் மூலம் அதிக கோல்களை அடித்த ஸ்பர்ஸ் ஆட்டக்காரர்கள் பட்டி யலில் அவர் நான்காவது இடத் திற்கு முன்னேறினார். எதிரணி அரங்கில் ஸ்பர்ஸ் குழுவின் ஆகப் பெரிய வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

