இந்தியா=தாய்லாந்து இன்று மோதல்

இந்தியா=தாய்லாந்து இன்று மோதல்

2 mins read

அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற் பந்துப் போட்டிகளில் இன்றிரவு இந்தியாவும் தாய்லாந்தும் பலப் பரிட்சை நடத்தவுள்ளன. ஐக்கிய அரபுச் சிற்றரசுகளில் 17வது ஆசியக் கிண்ணக் காற் பந்துப் போட்டிகள் நேற்று தொடங்கின. பிரிவுக்கு நான்கு அணிகள் என ஆறு பிரிவுகளாக மொத்தம் 24 அணிகள் போட்டி யிடுகின்றன. இதில் ஐக்கிய அரபுச் சிற்றரசுகள், தாய்லாந்து, பஹ்ரேன் ஆகிய நாடுகளுடன் இந்தியா 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. ஆசியக் கிண்ணப் போட்டி களில் இந்தியா பங்கேற்பது இது நான்காவது முறை. உலகத் தரவரிசையில் 97ஆம் இடத்தில் இருக்கும் இந்தியா, அபுதாபியின் அல் நயான் விளையாட்டரங்கில் சிங்கப்பூர் நேரப்படி இன்றிரவு 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத் தில் தரவரிசையில் 118ஆம் இடத்தில் இருக்கும் தாய்லாந்தைச் சந்திக்கிறது. சீனா, ஜோர்தானுக்கு எதிரான நட்புமுறை ஆட்டங்களில் சிறப் பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணி, இன்றும் தனது பலத்தை நிரூபிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாக்குதல் ஆட்டக்காரரான சுனில் சேத்ரி அணிக்குத் தலை மையேற்று வழிநடத்தவுள்ளார். கோல்காப்பாளர் குர்பிரீத் சிங் சந்து, தற்காப்பு ஆட்டக்காரர் சந்தேஷ் ஜிங்கன், மத்தியத் திடல் உதந்தா சிங் ஆகியோரின் செயல்பாடு அருமையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

அதே நேரத்தில், தாக்குதல் ஆட்டக்காரர் ஜேஜே லால்பெக் லுவாவின் ஆட்டத்திறன் கவலை அளிப்பதாக உள்ளது. மறுமுனையில், 'ஃபிளையிங் கவின்' என அழைக்கப்படும் கோல்காப்பாளர் கவின் தம்சச் சனன் இல்லாமல் தாய்லாந்து களமிறங்கவுள்ளது. மத்தியத் திடலில் சனத்திப் சொங்கிராசின், தாக்குதலில் தீராசில் டங்டா, தற்காப்பில் தீரத்தோன் புன்மதன் ஆகியோர் இருப்பது பலம். இவ்விரு குழுக்களும் இதற்கு முன் 21 முறை மோதியுள்ளன. அதில் 11 முறை தாய்லாந்தும் இந்தியா நான்கு போட்டிகளிலும் வென்றுள்ளன. இருந்தாலும் தரவரிசையில் இப்போதைய நிலையைப் பார்க்கும் போது பலமிக்க அணியாகத் திகழும் இந்தியா இன்றைய ஆட்டத்தில் வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதாஜ காற்பந்து விமர் சகர்கள் கருதுகின்றனர்.