கடைசி நேர கோலால் கனவு கலைந்தது

கடைசி நேர கோலால் கனவு கலைந்தது

1 mins read
fa37c5d2-7759-4815-9c10-3a39ebd9eb48
-

அபுதாபி: கடைசித் தருணத்தில் கிட்டிய பெனால்டி வாய்ப்பைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டு பஹ்ரேன் ஒரு கோலை அடித்து 1-0 என ஆட்டத்தில் வெற்றிபெற, ஆசிய கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறவேண்டும் என்ற இந்திய அணியின் கனவு கலைந்தது.

தொண்ணூறு நிமிடங்கள் வரை 0-0 என்ற நிலையிலேயே ஆட்டம் சென்றது. இடைநிறுத்தத்திற்காக இறுதியில் சேர்க்கப்பட்ட கூடுதல் நேரத்தின் முதல் நிமிடத்தில் இந்திய அணித்தலைவர் பிரணாய் ஹால்தர், கோல் கட்டத்திற்குள் பஹ்ரேன் தாக்குதல் ஆட்டக்காரரை விழச் செய்தார். இதைக் கண்டதும் சற்றும் தாமதிக்காது பஹ்ரேனுக்குப் பெனால்டி வாய்ப்பு வழங்கினார் நடுவர்.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஜமால் ரஷீத் லாவகமாக பந்தை வலைக்குள் தள்ளி கோலடிக்க, பஹ்ரேன் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

மற்றோர் 'ஏ' பிரிவு ஆட்டத்தில் 1-1 எனச் சமநிலை கண்ட தாய்லாந்தும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளும் இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தன.

இந்தத் தொடரில் தான் பங்கேற்ற முதல் ஆட்டத்தில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் தாய்லாந்தைப் பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் 0-2 என ஐக்கிய அரபுச் சிற்றரசுகளிடம் தோற்றுப்போனது.

இதற்கிடையே, ஆசிய கிண்ணப் போட்டிகளில் முதல் சுற்றுடன் வெளியேறியதை அடுத்து ஸ்டீஃபன் கான்ஸ்டன்டைன் இந்திய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார்.