மைக்கல் கிளார்க்: கோஹ்லியே தலைசிறந்த வீரர்

மைக்கல் கிளார்க்: கோஹ்லியே தலைசிறந்த வீரர்

2 mins read

மெல்பர்ன்: அனைத்துலக ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லியே உலகின் தலைசிறந்த ஆட்டக்காரர் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் தலைவர் மைக்கல் கிளார்க் புகழாரம் சூட்டியுள்ளார். இந்திய அணிக்காக கோஹ்லி பெற்றுத் தந்த வெற்றிகளையும் நிகழ்த்திய சாதனைகளையும் காணும்போது அவரே தலைசிறந்த ஆட்டக்காரர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று கிளார்க் கூறியுள்ளார். இதுவரை 219 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் கோஹ்லி 39 சதங்களுடன் 10.382 ஓட்டங்களை எடுத்துள்ளார். சராசரி 59க்கும் மேல். அனைத்துலக கிரிக்கெட் மன்றத்தின் இப்போதைய டெஸ்ட், ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பது கோஹ்லிதான். அண்மையில் அவரது தலைமையில் இந்திய அணி முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் டெஸ்ட், ஒருநாள் போட்டித் தொடர்களை வென்று சரித்திரம் படைத்தது. அத்துடன், ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய முதல் ஆசிய அணித் தலைவர் என்ற பெருமையையும் அவர் தேடிக்கொண்டார். அனைத்துலகப் போட்டிகளில் கோஹ்லியின் சத எண்ணிக்கையும் வெகுவேகமாக உயர்ந்து வருகிறது. "இந்திய அணிக்காகப் பல வெற்றிகளைத் தேடித் தரவேண்டும் என்ற கோஹ்லியின் பேரார்வத்தை நாம் மதிக்க வேண்டும். "களத்தில் அவர் ஆக்ரோஷமாக இருப்பது உண்மைதான். ஆனால், அவர் கொண்டுள்ள கடப்பாடு மீது எவரும் வினா எழுப்ப முடியாது. "அவர் சாதித்தது ஏராளம். ஒருநாள் கிரிக்கெட்டில் அவரே தலைசிறந்தவர்," என்றார் கிளார்க். அடுத்ததாக, கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் ஐந்து ஒருநாள் போட்டிகளிலும் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் விளை யாடவுள்ளது. முதல் ஒருநாள் போட்டி நாளை நேப்பியரில் நடைபெறவிருக்கிறது.