அபுதாபி: ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியை ஏற்று நடத்தும் ஐக்கிய அரபு சிற்றரகள் (யுஏஇ) காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் கிர்கிஸ்தான் குழுவை அது 3=2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது. ஆட்டம் 2=2 எனும் கோல் கணக்கில் சமநிலையில் இருந்த போது யுஏஇக்குக் கூடுதல் நேரத்தில் சர்ச்சைக்குரிய பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை அக்குழுவின் அகமது கலில் கோலாக்கினார். அதுவே யுஏஇயின் வெற்றி கோலாக அமைந்தது. ஆனால் இந்த வெற்றியை அக்குழு போராடி பெற வேண்டி இருந்தது. கிர்கிஸ்தானை யுஏஇ எளிதில் வெல்லும் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் கிர்கிஸ்தான் விட்டுக் கொடுக்காமல் விளையாட, யுஏஇ வீரர்கள் திக்குமுக்காடினர். ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் கார்னர் வாய்ப்பு மூலம் வந்த பந்தைத் தலையால் முட்டி கோலாக்கினார் யுஏஇயின் கமிஸ் இஸ்மாயில். துவண்டுவிடாமல் விளையாடிய கிரிகிஸ்தான், சில நிமிடங்கள் கழித்து ஆட்டத்தைச் சமன் செய்தது. யுஏஇ கோல்காப்பாளரைக் கடந்து சென்ற மிர்லான் முர்சாயேவ் பந்தை வலைக்குள் சேர்த்தார்.
ஐக்கிய அரபு சிற்றரசுகளின் இரண்டாவது கோலைப் போடும் அலி மப்கோட் (வலமிருந்து இரண்டாவது). பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்க கிர்கிஸ்தான் தற்காப்பு ஆட்டக்காரர் மற்றும் கோல்காப்பாளர் எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எதிர்பாரா வகையில் கிர்கிஸ்தான் ஐக்கிய அரபு சிற்றரசுகளுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டு அக்குழுவுக்கு நெருக்குதலைத் தந்தது. இருப்பினும், பதற்றம் அடையாமல் நிதானத்துடன் விளையாடிய ஐக்கிய அரபு சிற்றரசுகள் குழு தனது சொந்த ரசிகர்களின் முன் வாகை சூடி காலிறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

