சிட்னி: ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடரை முதல்முறையாக வென்று சாதனைப் படைத்த விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணியை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பந்தடிப்பாளர் டீன் ஜோன்ஸ் வெகுவாக பாராட்டி இருக்கிறார். "1980ஆம் ஆண்டுகளில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஆதிக்கம் செலுத்தியதைப் போலவே தற்போதையை இந்திய கிரிக்கெட் அணி வெளுத்து வாங்குகிறது. "அந்தக் காலகட்டத்தில் எந்த அணியையும் எந்த இடத்திலும் வீழ்த்தும் சக்தியுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி விளங்கியது. அதேபோல விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி எல்லா அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடி ஆதிக்கம் செலுத்துகிறது. மற்ற அணி களுக்கு அச்சுறுத்தலாக விளங்கு கிறது.
"இந்திய அணிக்கு இந்த ஆஸ்திரேலியப் பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது எனலாம். பெர்த் டெஸ்ட்போட்டியைத் தவிர அனைத்து ஆட்டங்களில் இந்திய அணி அபாரமாகச் செயல்பட்டது. இந்திய வீரர்கள் ஒவ்வொருவரும் அணியின் வெற்றிக்கு நன்கு பங்களித்தனர்.

