இந்திய சுழலில் சிக்கிய நியூசிலாந்து

நேப்பியர்: ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி வாகை சூடிய கையோடு அடுத்து நியூசிலாந்து அணியையும் ஒரு கை பார்க்கப் புறப்பட்டுவிட்டது விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி.
ஐந்து ஒருநாள், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, தனது சுற்றுப்பயணத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
நேப்பியரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத் தில் எளிதாக வெற்றி பெற்றது.
பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தமது அணி முதலில் பந்தடிக்கும் என அறிவித்தார். ஆனால், அவர் தவறான முடிவை எடுத்துவிட்டார் எனக் கருதும்படியாக அமைந்தது அந்த அணியின் பந்தடிப்பு.
தொடக்க ஆட்டக்காரர்களான மார்ட்டின் கப்டிலையும் கோலின் மன்ரோவையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றினார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமி.
அடுத்து களம் கண்டவர்கள் யுஸ்வேந்திர சகல், குல்தீப் யாதவ் ஆகிய இந்திய சுழற்பந்து வீச்சாளர்களிடம் சிக்கி சின்னபின்னமாகினர்.