பர்ன்லியை நொறுக்கியது மேன்சிட்டி

லண்டன்: எஃப்ஏ கிண்ணப் போட்டியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நான்காம் சுற்று ஆட்டம் ஒன்றில் பர்ன்லி காற்­பந்துக் குழுவை 5-0 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி மான்செஸ்டர் சிட்டி அபார வெற்றி பெற்றது.
கேப்ரியல் ஜீசஸ், பெர்னாடோ சில்வா, கெவின் டி பிரய்ன, செர்ஜியோ அகுவேரோ ஆகிய மேன்சிட்டி ஆட்டக்காரர்கள் அடித்த தலா ஒரு கோலும் பர்ன்லி ஆட்டக்காரர் கெவின் லோங் தனது சொந்த வலைக்குள் தவ­றாகப் புகுத்திய ஒரு கோலும் சிட்டி­யின் வெற்றிக்கு வித்திட்டன.
சிட்டி ஆட்டக்காரர்களின் திறனைக் கண்டு அசந்துபோன பர்ன்லி நிர்வாகி ஷான் டைக், இப்பருவத்தில் சிட்டி வெல்ல முடியாதது ஒன்றும் இல்லை என்று கூறியுள்ளார்.
“சிட்டியிடம் மிகச் சிறந்த ஆட்டக்காரர்கள் உள்ளனர். ஆட்டத்தை வெல்லக்கூடிய அபாரத் திறனும் மனோதிடமும் அவர்களிடம் நிறைந்துள்ளன. அப்படியென்றால், அக்குழு அனைத்துப் போட்டிகளையும் வெல்வதை யாரால் தடுக்க முடியும்?” என்று அவர் புகழாரம் சூட்டினார்.
பர்ன்லி குழு கடைசியாக விளையாடிய ஆறு ஆட்டங்களில் அதற்குக் கிட்டிய முதல் தோல்வி இதுவே.