ஆதிக்கம் செலுத்தி வரும் இந்திய அணி

வெலிங்டன்: இது இந்திய கிரிக்கெட் அணிக்குப் பொற்காலம்.

கடந்த ஓராண்டில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இப்போது நியூசிலாந்து என மூன்று முக்கிய அணிகளை அவற்றின் சொந்த மண்ணிலேயே இந்திய அணி வெற்றிகொண்டுள்ளது. இடையில் இங்கிலாந்திடம் மட்டும் மண்ணைக் கவ்வியது. இருப்பினும் இவ்வாண்டு மத்தியில் அங்கு நடக்கவிருக்கும் உலகக் கிண்ணத்தை வெல்லும்பட்சத்தில் அந்தச் சோகமும் தீரும்.

நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதல் இரு போட்டிகளிலும் வெற்றி பெற்றிருந்ததால் 3-0 என தொடரையும்  இந்திய அணி இப்போதே கைப்பற்றிவிட்டது.
பத்தாண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் இந்திய அணி ஒரு நாள் போட்டித் தொடரை வென்று இருப்பது இதுவே முதன்முறை.

தொடைத் தசைநார் காயம் காரணமாக நேற்றைய ஆட்டத்தில் டோனி விளையாடவில்லை. அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக் விக்கெட் காப்பாளராக இடம்பெற்றார். விஜய் சங்கருக்குப் பதிலாக ஹார்திக் பாண்டியா சேர்க்கப்பட்டார். 

பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக ரோஸ் டெய்லர் 93 ஓட்டங்களையும் டாம் லேதம் 51 ஓட்டங்களையும் எடுத்தனர். அந்த அணி 49 ஓவர்களில் 243 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்த இலக்கை இந்திய அணி 43 ஓவர்களிலேயே எட்டியது. தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 28 ஓட்டங்களில் வெளியேறியபோதும் 2வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா (62) - விராத் கோஹ்லி (60) இணை 113 ஓட்டங்களைச் சேர்த்தது. அதன்பின் இணைந்த அம்பதி ராயுடுவும் (40*) தினேஷ் கார்த்திக்கும் (38*) பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பெறச் செய்தனர்.

முதல் போட்டியின் நாயகனான இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஷமியே இப்போட்டியிலும் அவ்விருதைத் தட்டிச் சென்றார். அவர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மூன்று போட்டிகளில் வென்று மிஞ்ச முடியாத முன்னிலையைப் பெற்றதால் மகிழ்ச்சி தெரிவித்த விராத் கோஹ்லி, எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் அதன்பின் நடை பெறும் டி20 தொடரிலும் விளையாடமாட்டார். அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் ரோகித் அணித் தலைவராகச் செயல்படுவார். நான்காவது போட்டி நாளை மறுநாள் நடக்கவுள்ளது. 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆட்டம் தொடங்குவதற்குமுன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித் தலைவர் விராத் கோஹ்லியுடன் கைகுலுக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணித் தலைவர் எம்.எஸ்.டோனி. படம்: ஏஎஃப்பி

23 Apr 2019

ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்சர்களைத் தாண்டிய முதல் இந்திய வீரர் டோனி