அதிரடி கோல்கள் போட்டு மகுடம் சூடிய கத்தார்

அபுதாபி: ஐக்கிய அரபு சிற்றரசுகள் ஏற்று நடத்திய ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் கத்தார் மகுடம் சூடியுள்ளது.
ஆசியக் கிண்ணத்தை கத்தார் வென்றிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இறுதி ஆட்டத்தில் ஜப்பானுடன் கத்தார் மோதியது. இதுவரை நான்கு முறை ஆசியக் கிண்ணத்தை ஏந்தியுள்ள ஜப்பான், கத்தாரை வீழ்த்தி ஐந்தாவது முறையாக கிண்ணத்தைக் கைப்பற்றும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆட்டம் தொடங்கி சிறிது நிமிடங்களிலேயே கத்தார் முத்திரை பதித்தது.
கத்தாரின் நட்சத்திர வீரர் அல்மோயேஸ் அலியின் சாகசம் ஜப்பானைத் திணறடித்தது.
ஜப்பானின் பெனால்டி எல்லைக்குள் இருந்த அலி, பந்தை மிக அழகாக தமது கட்டுக்குள் கொண்டு வந்தார்.
ஜப்பானிய தற்காப்பு வீரர்கள் அவரை நெருங்குவதற்குள் ‘ஓவர்ஹேட் கிக்’ மூலம் பந்தை வலை நோக்கி அனுப்பினார்.
அலியின் கோல் முயற்சியை முறியடிக்க ஜப்பானிய கோல் காப்பாளர் பாய்ந்தும் பயனற்று போனது.
பந்து வலையைத் தீண்ட கத்தார் கொண்டாடத் தொடங் கியது. இது ஆசியக் கிண்ணப் போட்டிகளில் அலி போட்ட ஒன்பதாவது கோல். இதற்கு முன்பு ஆசியக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் யாரும் இத்தனை கோல்களைப் போட்டது இல்லை.
இதற்கு முன்பு ஈரானின் முன்னாள் நட்சத்திர வீரர் அலி டாயிதான் ஆக அதிக கோல்களைப் போட்டிருந்தார்.
அல்மோயேஸ் அலி ஆப்பிரிக் காவில் உள்ள சூடானில் பிறந்தவர். இதைக் காரணம் காட்டி அவர் இப்போட்டியில் பங்கெடுக்கக்கூடாது என்று இறுதி ஆட்டம் தொடங்குவதற்குச் சில மணி நேரம் இருந்தபோது ஐக்கிய அரபு சிற்றரசுகள் எதிர்ப்பு   காட்டியது. ஆனால் இதை ஆசியக் காற்பந்துச் சம்மேளனம் ஏற்க மறுத்து இறுதி ஆட்டத்தில் அலி களமிறங்க அனுமதித்தது.
முதல் கோல் புகுந்ததைக் கண்டு அரங்கில் கூடியிருந்த கத்தார் ரசிகர்கள் கொண்டாடினர். அவர்களது கொண்டாட்டம் தணிவதற்குள் ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் கத்தாரின் இரண்டாவது கோல் புகுந்தது.
கத்தாரின் இரண்டாவது கோலும் பார்ப்பவரைப் பிரமிக்க வைக்கும் அளவுக்கு மிக அற்புதமாக இருந்தது.
பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து அப்துல் அசிஸ் ஹதீம் அனுப்பிய பந்து வளைந்து சென்று வலையைத் தொட்டது.
இடைவேளையின்போது 2-0 எனும் கோல் கணக்கில் கத்தார் முன்னிலை வகித்தது.
 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர், படம்: ராய்ட்டர்ஸ்

20 Jul 2019

சச்சினுக்கு உயரிய விருது