மீண்டும் வெற்றிப் பாதையில் செல்சி

லண்டன்: போர்ன்மத் குழுவிடம் சில நாட்களுக்குமுன் மரண அடி வாங்கியதால் துவண்டுபோயிருந்த செல்சி காற்பந்துக் குழு, அதில் இருந்து மீண்டெழுந்து, மறுபடியும் வெற்றிப் பாதையில் அடியெடுத்து வைத்துள்ளது. பட்டியலின் கடைசி இடத்தில் உள்ள ஹடர்ஸ்ஃபீல்ட் குழுவைத் தனக்குச் சொந்தமான ஸ்டாம் ஃபர்ட் பிரிட்ஜ் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் எதிர்கொண்ட செல்சி 5-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

புதிய வரவான அர்ஜெண்டினா ஆட்டக்காரர் கோன்சாலோ ஹிகுவைன் இந்த ஆட்டத்தில் இரு கோல்களை அடித்து செல்சி சார்பில் தமது கோல் கணக்கைத் தொடங்கினார். கடந்த மாதத் தில்தான் இத்தாலியின் யுவென்டஸ் குழுவில் இருந்து அவர் செல்சி குழுவிற்கு மாறியிருந்தார்.
நட்சத்திர ஆட்டக்காரர் ஈடன் ஹசார்ட் இரு கோல்களையும் பிரேசிலின் டாவிட் லூயிஸ் ஒரு கோலையும் போட்டனர். 2018 டிசம்பர் 26ஆம் தேதிக்குப் பின் இபிஎல் ஆட்டமொன்றில் ஹசார்ட் கோலடித்தது இதுவே முதன்முறை.

இந்த வெற்றியின்மூலம் இங் கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் செல்சி மீண்டும் நான்காமிடத்திற்கு முன்னேறியது (மான்செஸ்டர் சிட்டி -ஆர்சனல் ஆட்டத்திற்கு முந்தைய நிலவரம்).

ஆட்டம் முடிந்தபின் பேசிய செல்சி நிர்வாகி மொரிசியோ சாரி, “ஹிகுவைன் மெருகேறி வருகிறார். அவர் இங்கு வந்தபோது முதுகுப் பிரச்சினை இருந்ததால் அவரது உடற்தகுதி உச்சத்தில் இல்லை. அவர் ஒரு சிறந்த ஆட்டக்காரர். கோலடிப்பதோடு நின்றுவிடாமல் ஈடன் ஹசார்டுடன் சேர்ந்து அவர் நல்லதோர் இணையாகத் திகழ முடியும்,” என்றார்.

இத்தாலியின் நேப்போலி குழு நிர்வாகியாக சாரி இருந்தபோது ஹிகுவைன் அக்குழுவிற்காக விளையாடினார். அதனால் அவரை எப்படியும் செல்சியில் ஒப்பந்தம் செய்ய சாரி பெரும் ஆர்வம் காட்டி வந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள ஆட்டத்தில் பட்டி யலின் இரண்டாமிடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி குழுவுடன் செல்சி மோதவிருக்கிறது.