இந்திய மகளிரைத் தோற்கடித்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி

ஹேமில்டன்: இந்தியா - நியூசிலாந்து மகளிர் அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், முதல் 2 ஆட்டங்களில் இடம் பெறாத இந்திய மூத்த வீராங்கனை மிதாலி ராஜூக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளுக்கு 161 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சோபி டேவின் 72 ஓட்டங்கள் (8 பவுண்டரிகள், 2 சிக்சர்கள்) எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா 86 ஓட்டங்கள் (62 பந்துகள், 12 பவுண்டரிகள், ஒரு சிக்சர்) விளாசிய போதிலும், மற்றவர்களின் பந்தடிப்பு சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லாலமல் போனது.  கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்டன. சுழற்பந்து வீச்சாளர் காஸ்பெரேக் கடைசி ஓவரை வீசினார். இந்த ஓவரில் மிதாலி=தீப்தி ஷர்மா கூட்டணியால் 2 பவுண்டரிகள் உட்பட 13 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. 
இதனால் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி கண்டது. இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 159 ஓட்டங்கள் எடுத்தது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக தனதாக்கியது.