பாண்டிங்: ஆஸ்திரேலியா மீண்டும் உலகக் கிண்ணத்தை ஏந்தும்

சிட்னி: பத்து அணிகள் பங்கேற்கும் 12வது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி வரும் மே மாதம் 30ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியை வலுப்படுத்தும் விதமாக அந்த அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டு இருக்கிறார். ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 2003 மற்றும் 2007ஆம் ஆண்டுகளில் உலக கிண்ணத்தை வென்று இருந்தது.
“கடந்த முறை நாங்கள் உலகக் கிண்ணத்தை வென்றோம். இந்த முறையும் எங்களால் உலகக் கிண்ணத்தை நிச்சயம் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்று நம்புகிறேன். தற்சமயம் உலகக் கிண்ணத்தை வெல்லும் வாய்ப்பில் இந்தியாவும், இங்கிலாந்தும் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் ஸ்டீவன் ஸ்மித்தும் டேவிட் வார்னரும் குழுவுக்குத் திரும்பியதும் எங்கள் அணியும் பலம் வாய்ந்ததாக உருவெடுத்துவிடும். ஸ்மித்தும் வார்னரும் உலகத்தரம் வாய்ந்த பந்தடிப்பாளர்கள், அனுபவசாலிகள். நெருக்கடியான சூழலைத் திறம்படக் கையாளக்கூடியவர்கள். உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும் இங்கிலாந்தில் உள்ள வானிலை எங்களது ஆட்ட பாணிக்குச் சாதகமானது. அதனால் உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள பிரதான அணிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியாவும் இருக்கும்,” என்று ரிக்கி பாண்டிங் தெரிவித்தார்.