வெற்றியை ருசித்த செல்சி; லிவர்பூல் கோல் மழை

லண்டன்: இங்கிலிஷ் லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் சந்தித்த தோல்வியை ஓர் ஓரமாக தள்ளி வைத்துவிட்டு அடுத்த ஆட்டத்தில் களமிறங்கி வெற்றியைச் சுவைத் துள்ளது செல்சி.
நேற்று அதிகாலை நடைபெற்ற பிரிமியர் லீக் ஆட்டத்தில் ஸ்பர்ஸ் குழுவை 2=0 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது செல்சி.
லீக் கிண்ண இறுதி ஆட்டத்தில் நிர்வாகி மொரிசியோ சாரியின் சொல்லுக்குக் கீழ்ப்படி யாமல் நடந்துகொண்ட கோல் காப்பாளர் கேப்பா அரிஸபலகா நேற்றைய ஆட்டத்தில் இடம் பெறவில்லை.
அவருக்குப் பதிலாக வில்லி கபலேரோ களமிறங்கினார். 
செல்சி தொடர்ந்து ஏமாற்றங் களைச் சந்தித்து வருவதால் நிர்வாகி சாரியின் பதவிக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நம்பப்படுகிறது.
இந்நிலையில், சாரிக்கு செல்சி ஆட்டக்காரர்களின் ஆதரவு இருப்பதை நேற்றைய ஆட்டம் நிரூபித்துள்ளது.
இடைவேளையின்போது செல்சி யும் ஸ்பர்சும் கோல் ஏதுமின்றி சமநிலையில் இருந்தன.

ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பெட்ரோ அனுப்பிய பந்து வலையைத் தொட, செல்சி முன்னிலை வகித்தது.
அதனைத் தொடர்ந்து, ஆட்டத் தைச் சமன் செய்ய ஸ்பர்ஸ் படாதபாடு பட்டும் அதன் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.
இந்நிலையில், ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் செல்சியின் வெற்றி உறுதியானது.
செல்சியின் வீலன் தம்மை நோக்கி வருவதைப் பார்த்த ஸ்பர்சின் கிரன் டிரிப்பியே பந்தை கோல்காப்பாளர் ஹியூகோ லோரிசிடம் அனுப்பினார்.
ஆனால் பந்து சொந்த வலைக்குள் சென்றது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற போதிலும் செல்சி தொடர்ந்து லீக் பட்டியலில் ஆறாவது நிலையில் இருக்கிறது.