மட்ரிட்: ஸ்பானிய காற்பந்து ஜாம்பவான் ரியால் மட்ரிட், சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு முந்திய சுற்றில் எதிர்பாரா வகையில் தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது. நெதர்லாந்தின் அயேக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழுவுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ரியால் 2-1 எனும் கோல் கணக்கில் வென்றது. எதிரணியின் அரங்கில் இரண்டு கோல்கள் போட்டு ஆட்டத்தை ரியால் கைப்பற்றியதால் வலுவான நிலையில் ரியால் இருந்தது. எனவே நேற்று அதிகாலை ரியாலின் அரங்கில் நடைபெற்ற இரண்டாவது சுற்றில் ரியால் எளிதில் வெற்றி பெறும் என நம்பப்பட்டது. ஆனால் நடந்ததோ வேறு. ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே அயேக்ஸ் கோல் போட்டு முன்னிலை வகித்தது. அயேக்ஸ் குழுவின் மொரோக்கா நட்சத்திர வீரர் ஹகிம் சியேச் அனுப்பிய பந்து வலையைத் தீண்டியது.
இந்த நிலை நீடித்திருந்தால் ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை சமநிலையில் இருந்தாலும் எதிரணியின் அரங்கில் கூடுதல் கோல் போட்ட காரணத்துக்காக ரியால் வென்றிருக்கும். ஆனால் அயேக்ஸ் குழுவின் கோல் பசி அத்துடன் முடிந்துவிடவில்லை. ஆட்டத்தின் 18வது நிமிடத்தில் டேவிட் நிரேஸ் அயேக்ஸ் குழுவின் இரண்டாவது கோலைப் போட்டார். இடைநீக்கம் செய்யப்பட்ட ரியாலின் அணித் தலைவர் செர்ஜியோ ராமோஸ் இந்த ஆட்டத்தில் களமிறங்கவில்லை. இந்தப் பின்னடைவு போதாது என்று முற்பாதி ஆட்டத்தில் ரியாலின் தாக்குதல் இருமுறை நூலிழையில் இலக்கை தவறியது. தங்கள் ஆட்டக்காரர்கள் அனுப்பிய பந்து இருமுறை கோல் கம்பம் மீது பட்டு வெளியானதைப் பார்த்து ரியாலின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இடைவேளையின்போது 2-0 எனும் கோல் கணக்கில் அயேக்ஸ் முன்னிலை வகித்தது. ஒட்டுமொத்த கோல் எண்ணிக்கை 3-2 என அயேக்ஸ் குழுவுக்குச் சாதகமாக இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் எப்படியும் மீண்டுவிடலாம் என்று ரியால் கொண்டிருந்த நம்பிக்கையை 62வது நிமிடத்தில் தகர்த்தார் டுசான் தடிச். பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து அவர் அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் வலைக்குள் புகுந்தது.
அயேக்ஸ் குழுவின் நான்காவது கோல். படம்: ராய்ட்டர்ஸ்

