சோல்சியார்: பார்சிலோனாவைக் கண்டு அஞ்சமாட்டோம்

லண்டன்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்று போட்டி களுக்கான குலுக்கல் முடிவுகள் நேற்று முன்தினம் அறிவிக்கப்பட்ட நிலையில், குழுக்களின் நிர்வாகிகள் தங்களது எதிர்பார்ப்புகளை வெளிப்படுத்தி உள்ளனர். 
இடைக்கால நிர்வாகி ஒலே குணார் சோல்சியாரின்கீழ் மறுமலர்ச்சி கண்டு உள்ள மான்செஸ்டர் யுனைடெட் குழு விற்கு இச்சுற்றில் மலைபோன்ற சோதனை காத்திருக்கிறது. ஸ்பானிய முன்னணி குழுவான பார்சிலோனா வுடன் அது பொருதுகிறது. 
இதற்கு முந்தைய சுற்றில் பிரான்சின் பாரிஸ் செயிண்ட் ஜெர்மான் குழுவுடன் விளையாடியதுபோல இந்தச் சுற்றின் முதல் ஆட்டம் யுனைடெட்டின் சொந்த அரங்கிலும் இரண்டாவது ஆட்டம் பார்சிலோனாவின் அரங்கிலும் நடை பெறவுள்ளது.
இதில் குறிப்பாக, இரண்டாவது ஆட்டத்தில் பார்சிலோனாவின் அரங்கில் விளையாடுவதில் யுனை டெட்டிற்கு எந்தவொரு அச்சமும் இல்லை என்று சோல்சியார் ஆணித்தர மாகக் கூறுகிறார்.
பொதுவாக இச்சுற்றின் இரண்டாவது ஆட்டத்தை எதிரணியின் அரங்கில் விளையாடுவது யுனைடெட்டிற்கு பாதக மாக இருக்கக்கூடும் என்று கூறப்படு கிறது. குறிப்பாக, தனது சொந்த மண்ணில் விளையாடிய இப்போட்டியின் கடைசி 30 ஆட்டங்களில் எதையும் பார்சிலோனா தோற்றதில்லை என்பது யுனைடெட்டிற்கு நடுக்கத்தை ஏற்படுத் தலாம்.
இருப்பினும் தலைசிறந்த ஆட்டக் காரர்களைக் கொண்ட பிஎஸ்ஜி குழுவை அதன் சொந்த அரங்கிலேயே யுனைடெட் வீழ்த்தியது என புகழ் பாடும் சோல்சியார், தமது ஆட்டக் காரர்கள் இந்தச் சவாலையும் தகர்த் தெறிவர் என்று கங்கணம் கட்டுகிறார்.
1999ஆம் ஆண்டில் பார்சிலோனா வின் அரங்கில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக்கின் இறுதி ஆட்டத்தில் பயர்ன் மியூனிக் குழுவிற்கு எதிராக கடைசி நிமிடத்தில் கோல் போட்ட யுனை டெட்டின் முன்னாள் தாக்குதல் ஆட்டக் காரரான சோல்சியாரின் கண்முன் பழைய நினைவுகள் நிழலாடக்கூடும்.
கடந்த ஆண்டு இப்போட்டியின் இறுதிச் சுற்று வரை சென்ற லிவர் பூலுக்கு இம்முறை காலிறுதிச் சுற்றில் சற்று எளிதான எதிரணி கிடைத்து உள்ளது என்று கருதப்படுகிறது. 
ஆனால், போர்ச்சுகலைச் சேர்ந்த போர்ட்டோ குழுவைத் தமது ஆட்டக் காரர்கள் குறைத்து எடைபோட்டுவிட மாட்டார்கள் என்று லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப் கூறியுள்ளார்.