சூப்பர் ஓவரில் வாகை சூடிய தென்னாப்பிரிக்கா

கேப்டவுன்: ‘சூப்பர் ஓவர்’ வரை விறுவிறுப்பாகச் சென்ற இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகன் விருது வென்ற அதிரடி ஆட்டக்காரர் டேவிட் மில்லரும் அனுபவமிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிரும் தென்னாப்பிரிக்க அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்தனர்.
சொந்த மண்ணில் முதன்முறையாக இலங்கை அணியிடம் டெஸ்ட் தொடரை இழந்து அவமானப் பட்ட தென்னாப்பிரிக்க அணி, அதன்பின் நடந்த ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 5-0 என முழுவதுமாக வென்று ஆறுதல் அடைந்தது.
இந்நிலையில், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் நேற்று முன்தினம் நள்ளிரவில் நடந்தது. முதலில் பந்தடித்த இலங்கை அணி 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
தென்னாப்பிரிக்க அணி இலக்கை எளிதாக எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. மாறாக இலங்கை வீரர்கள் பந்துவீச்சில் ஓட்டம் குவிக்கத் திணறியது. இறுதியில், அவ்வணியும் எட்டு விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களையே எடுத்ததால் வெற்றியாளரைத் தீர்மானிக்க ‘சூப்பர் ஓவர்’ முறை பின்பற்றப்பட்டது.
அதில் முதலில் பந்தடித்த தென்னாப்பிரிக்க அணி 14 ஓட்டங்களை விளாச, இலங்கை அணி ஐந்து ஓட்டங்களை மட்டும் எடுத்து தோற்றுப்போனது.