மூன்றாவது இடம் பிடித்த மலேசியா

மூன்றாவது இடம் பிடித்த மலேசியா

2 mins read

கோலாலம்பூர்: ஏர்மரீன் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் மூன்றாவது இடத்தை மலேசியா பிடித்துள்ளது. நேற்று மாலை புக்கிட் ஜலீல் விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 2-1 எனும் கோல் கணக்கில் மலேசியா வீழ்த்தியது. கடந்த புதன்கிழமையன்று சிங்கப் பூரிடம் 1-0 எனும் கோல் கணக்கில் மலேசியா தோல்வியைத் தழுவியது. அந்த ஆட்டத்தில் கோல் போட கிடைத்த பல வாய்ப்புகளை மலேசிய ஆட்டக்காரர்கள் வீணடித்தனர். ஓமானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 5-0 எனும் கோல் கணக்கில் படுதோல்வி அடைந்தது. முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்வி அடைந்த மலேசியாவும் ஆப்கானிஸ்தானும் மூன்றாவது இடத்துக்காக நேற்று மோதின. கொட்டும் மழையில் நடைபெற்ற ஆட்டத்தில் பந்தைக் கட்டுக்குள் வைத்திருக்க இருதரப்பினரும் சிரமப் பட்டனர். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தான் கோல் போட்டு முன்னிலை வகித்தது. மலேசியாவின் பெனால்டி எல்லைக்கு வெளியிலிருந்து ஆப்கா னிஸ்தானின் மத்தியத்திடல் ஆட்டக் காரர் ஃபைசால் ஷேயஸ்தே அனுப்பிய பந்து வளைந்து சென்று வலையைத் தொட்டது. இந்த கோல் மலேசியாவைத் தட்டி எழுப்பியது. இடைவேளைக்கு இரண்டு நிமிடங்கள் இருந்தபோது மலேசியா வுக்காக முதல்முறையாக அனைத்துலக ஆட்டத்தில் களமிறங்கிய ஃபயீஸ் நசீர் கோல் போட்டார். அவர் கோல் போட்ட விதம் அரங்கில் இருந்தோரைப் பிரமிப்பில் ஆழ்த்தியது. தொலைவிலிருந்து அவர் அனுப்பிய பந்து மின்னல் வேகத்தில் வலைக்குள் புகுந்தது. பந்து வலைக்குள் செல்வதைத் தடுக்கப் பாய்ந்த ஆப்கானிஸ்தான் கோல்காப்பாளருக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. அதையடுத்து, கோல் போட மலேசியாவுக்குப் பல வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவற்றை அது கோட்டைவிட்டது. கிடைக்கும் வாய்ப்புகளை கோல் களாக மாற்ற முடியாததே மலேசியாவின் பிரச்சினையாக உள்ளது. இந்நிலையில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஆப்கானிஸ்தானின் அபாஸின் அலிகில் சொந்த கோல் போட்டார். இதுவே மலேசியாவின் வெற்றி கோலாக அமைந்தது. இறுதி ஆட்டத்தில் ஓமானும் சிங்கப்பூரும் நேற்றிரவு மோதின.