ஷார்ஜா: ஆஸ்திரேலியா -பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் நேற்று முன்தினம் பகல்இரவாக நடைபெற்றது. முதலில் பந்தடித்த பாகிஸ்தான் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 284 ஓட்டங்கள் குவித்தது. முகம்மது ரிஸ்வான் சதம் அடித்தார். அவர் 126 பந்துகளில் 115 ஓட்டங்களும் (11 பவுண்டரிகள்) அணித் சோயப் மாலிக் 60 ஓட்டங்களும் எடுத்தனர். பின்னர் பந்தடித்த ஆஸ்திரேலியா 47.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணித் தலைவர் ஏரன் ஃபிஞ்ச் மீண்டும் சதம் அடித்தார். அவர் 143 பந்துகளில் 153 ஓட்டங்களும் (11 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) உஸ்மான் கவாஜா 88 ஓட்டங்களும் எடுத்தனர். இருவரும் தொடக்க விக்கெட்டுக்கு 209 ஓட்டங்கள் எடுத்தனர். ஃபிஞ்ச் முதல் ஆட்டத்தில் 116 ஓட்டங்களை எடுத்து இருந்தார். இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2=0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்திலும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று இருந்தது. மூன்றாவது போட்டி நாளை அபுதாபியில் நடைபெறுகிறது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா
1 mins read

