இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் விளையாடும் மான்செஸ்டர் யுனைடெட், டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் காற்பந்துக் குழுக்களும் இத்தாலிய லீக்கின் இண்டர் மிலான், யுவென்டஸ் குழுக்களும் சிங்கப்பூரில் இவ்வாண்டு ஜூலை மாதம் நடைபெறவிருக்கும் அனைத்துலக வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் விளையாடவுள்ளன. அடுத்த லீக் பருவத்திற்கு முந்தைய போட்டியான இது இங்குள்ள தேசிய விளையாட்டரங்கில் நடைபெறும். இது குறித்த விவரங்கள் நேற்று அறிவிக்கப்பட்டன.
டுவைட் யோர்க் (யுனைடெட்), பிரான்செஸ்கோ டோல்டோ (இண்டர்), ஃபபிரிஸியோ ரவநெல்லி (யுவென்டஸ்), தெடி ஷெரிங்ஹம் (ஸ்பர்ஸ்) ஆகிய நான்கு சகாப்தங்களும் தங்களது முன்னாள் குழுக்களைப் பிரதிநிதித்து பாடாங்கில் இந்த அறிவிப்புகளை வெளியிட்டனர்.ஜூலை 20ஆம் தேதி இண்டருடன் யுனைடெட் பொருதவுள்ளது. ஒரு நாள் கழித்து, ஸ்பர்ஸ் குழுவை யுவென்டஸ் எதிர்கொள்கிறது. இரு ஆட்டங்களும் இரவு 7.30 மணிக்கு தொடங்கும்.
எதிர்வரும் கோடைக்காலத்தில் உலகக் கிண்ணம் அல்லது ஐரோப்பியக் கிண்ணப் போட்டி எதுவும் நடைபெறாத வேளையில் மேற்கண்ட குழுக்களில் விளையாடும் முன்னணி நட்சத்திரங்களும் இந்த ஆட்டங்களில் விளையாடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எந்தெந்த வீரர்கள் விளையாடப் போகிறார்கள் என்பது பற்றிய தகவல்களைப் போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கவில்லை.
"எங்களது மிகப் பெரிய சந்தைகளில் ஆசியாவும் ஒன்று என்பது எங்களுக்கு தெரியும். அவ்வகையில் சிங்கப்பூரும் எங்களுக்கு மிகவும் முக்கிய தளம். இங்குள்ள ஏராளமான ரசிகர்களுடன் எங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள விரும்புகிறோம். அதே வேளையில் எங்களது குழுவின் சின்னத்தையும் இது மேம்படுத்தும்," என்று யுனைடெட்டின் சார்பில் யோர்க் கூறினார்.
கடந்த ஆண்டு இந்தக் கிண்ணத்தை ஸ்பர்ஸ் வென்றது. இப்போட்டிக்கான நுழைவுச்சீட்டு விற்பனை ஏப்ரல் 4ஆம் தேதி தொடங்குகிறது.

