முதல் இடத்துக்கு முன்னேறிய லிவர்பூல்

முதல் இடத்துக்கு முன்னேறிய லிவர்பூல்

2 mins read
c31a5a19-25a3-4707-ae0a-6726df8e8419
லிவர்பூலின் இரண்டாவது கோலைக் கொண்டாடும் அக்குழுவின் (இடமிருந்து வலது) ரொபேர்ட்டோ ஃபிர்மினோ, முகம்மது சாலா. படம்: இபிஏ -

லிவர்பூல்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியில் லிவர்பூல் மீண்டும் முன்னிலை வகிக்கிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மூன்றாவது இடத்தில் இருக்கும் ஸ்பர்ஸ் குழுவை அது 2=1 எனும் கோல் கணக்கில் வீழ்த்தி மூன்று புள்ளிகளைப் பெற்றது. இதன் விளைவாக 32 ஆட்டங்களில் களமிறங்கி 79 புள்ளிகளை லிவர்பூல் பெற்று உள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள மான்செஸ்டர் சிட்டி 77 புள்ளிகள் பெற்றுள்ளது. இருப்பினும், அது 31 ஆட்டங்களில் மட்டும் விளை யாடியுள்ளது. ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் லிவர்பூலின் ரொபேர்ட்டோ ஃபிர்மினோ கோல் போட்டு தமது குழுவை முன்னிலைக்குக் கொண்டு சென்றார். 70வது நிமிடத்தில் ஸ்பர்ஸ் குழுவின் லூக்கஸ் மோரா ஆட்டத்தைச் சமன் செய்தார். ஆட்டத்தில் 85வது நிமிடத்தில் ஸ்பர்ஸின் மூசா சிசோக்காவுக்கு கோல் போட பொன்னான வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை அவர் நழுவவிட்டார். ஆட்டம் சமநிலையை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது 90வது நிமிடத்தில் லிவர்பூலின் நட்சத்திர வீரர் முகம்மது சாலா அனுப்பிய பந்தை ஸ்பர்ஸ் கோல்காப்பாளர் தட்டிவிட்டார். ஆனால் அவர் தட்டிவிட்ட பந்து ஸ்பர்ஸ் தற்காப்பு ஆட்டக் காரர் அல்டர்வேரல்ட்டின் காலில் பட்டு வலைக்குள் சென்றது. இந்தக் கடைசி நேர சொந்த கோல் லிவர்பூலுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது. 29 ஆண்டுகள் கழித்து இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இருக்கும் லிவர்பூலுக்கு இந்த வெற்றி மிகவும் முக்கியம். ஆட்டத்தின் கடைசி 20 நிமிடங்களில் ஸ்பர்ஸ் ஆட்டக் காரர்கள் உற்சாகமின்றி காணப் பட்டதாக அக்குழுவின் நிர்வாகி பொக்கெட்டினோ குறைகூறினார்.