தெறிக்கவிட்ட ஆர்சனல்; கதிகலங்கிய நேப்போலி

லண்டன்: யூரோப்பா லீக்  காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கான முதல் ஆட்டத்தில் ஆர்சனல் வெற்றி பெற்றுள்ளது. நேற்று முன்தினம்  நடைபெற்ற இந்த ஆட்டம் ஆர்சனலின் விளையாட்டரங்கத்தில்  நடை பெற்றது. இதில் நேப்போலியை 2=0 எனும் கோல் கணக்கில் ஆர்சனல் தோற்கடித்தது. 
இதன் விளைவாக அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறும் வாய்ப்பை  ஆர்சனல் வலுப்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் 14வது நிமிடத்தில் ஏரோன் ரேம்சி ஆர்சனலின் முதல் கோலைப் போட்டார். 
பத்து நிமிடங்கள் கழித்து, ஆர்சனலின் இரண்டாவது கோல் புகுந்தது. ஆர்சனலின் லூக்கஸ் டொரேரா மத்தியத் திடலிலிருந்து பந்தைத் தமது கட்டுக்குள் வைத்துக்கொண்டு வலை நோக்கி விரைந்தார். பந்தை வலை நோக்கி அவர் அனுப்ப, அது நேப்போலியின் தற்காப்பு ஆட்டக்காரரான கோலிபாலி மீது பட்டு வலைக்குள் சென்றது.  
நேப்போலியால் இறுதி வரை கோல் போட முடியாமல் போக ஆர்சனல் வாகை சூடியது. இந்த இரண்டு குழுக்களுக்கும் இடை யிலான இரண்டாவது ஆட்டம் இம்மாதம் 19ஆம் தேதி இத்தாலியில் நடைபெறும்.
மற்றோர் ஆட்டத்தில் செல்சியும் செக் குடியரசின் சிலாவியா பிராஹாவும் மோதின. இந்த ஆட்டம் செக் குடியரசுத் தலைநகர் பிராக்கில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் போட முடியாமல் தவித்தன. ஆட்டம் கோல் ஏதுமின்றி சமநிலையில் முடியும் என்று எதிர்பார்க்கப் பட்டபோது செல்சி கோல் போட்டது.
ஆட்டத்தின் 86வது நிமிடத்தில் செல்சியின் தற்காப்பு ஆட்டக்காரர் மார்க்கஸ் அலோன்சோ பந்தைத் தலையால் முட்டி வலைக்குள் சேர்த்தார்.
எதிரணியின் கோட்டையில் கோல் போட்ட சாதக நிலையுடன் இரண்டாவது ஆட்டத்துக்கு செல்சி  காத்துக்கொண்டிருக்கிறது.
வில்லாரியாலுக்கும் வெலென்சி யாவுக்கும் இடையிலான ஆட்டத்தின் கடைசிக்கட்டத்தில் இரண்டு கோல்கள் போடப்பட்டன. அதற்கு முன்பு இரு குழுக்களும் தரப்புக்கு இரண்டு கோல்கள் போட்டு சமநிலையில் இருந்தன.
இடைநிறுத்தத்திற்காக வழங் கப்பட்ட கூடுதல் நேரத்தில் வெலென்சியா இரண்டு கோல்களைப் போட்டு வெற்றி பெற்றது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon