கலைந்த கனவுகளுடன் வெளியேறிய யுனைடெட்

கலைந்த கனவுகளுடன் வெளியேறிய யுனைடெட்

3 mins read
5309a136-6040-4d25-8b05-7e321be19820
பார்சிலோனாவின் லயனல் மெஸ்ஸி இரு கால்களையும் உயர்த்தி யுனைடெட் கோல் கம்பத்தை நோக்கி உதைக்கிறார். நேற்றைய ஆட்டத்தில் இவர் இரு கோல்கள் போட்டு யுனைடெட்டை திக்குமுக்காட வைத்தார். படம்: ராய்ட்டர்ஸ் -

பார்சிலோனா: மான்செஸ்டர் யுனைடெட்டின் சாம்பியன்ஸ் லீக் கனவுகள் கலைந்த நிலையில் அந்தப் போட்டியிலிருந்து நேற்று அது வெளியேறியது. நேற்று அதிகாலை பார்சிலோனா வின் நூ காம்ப் மைதானத்தில் அந்தக் குழுவை காலிறுதியில் எதிர்கொண்ட யுனைடெட் 0-3 என்ற கோல் எண்ணிக்கையில் தோல்வியைத் தழுவியது. இந்த நிலை மான்செஸ்டர் யுனைடெட் குழுவுக்கு இதற்கு முன்பே ஏற்பட்டிருக்க வேண்டும் எனப் பலரும் நினைத்திருந்த நிலையில் கடந்த சுற்று ஆட்டத்தில் அது பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் குழுவை ஆச்சரியப்படும் விதத்தில் வெற்றி கொண்டு காலிறுதிக்கு தகுதி பெற்றது. இதனாலேயே பலரும் எப்படியா வது பார்சிலோனா குழுவையும் யுனைடெட் வென்று சாதனை படைடக்கும் என கருதினர். ஆனால், சட்டியிலிருந்தால்தான் அகப்பையில் வரும் என்ற முது மொழிக்கு ஏற்ப பார்சிலோனாவை எதிர்கொள்ளத் தேவையான திறன் படைத்த வீரர்கள் யுனைடெட்டிடம் இல்லை என்பதே உண்மை. இருந்தாலும் இவ்வளவு எளிதாக பார்சிலோனா அணிக்கு வெற்றியைப் பரிசாக அளித்திருக்க வேண்டாம் என்பதே அதன் ரசிகர்களின் ஆதங்கம். நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியிலேயே, 16ஆம் நிமிடத்தில், பார்சிலோனாவின் நட்சத்திர ஆட்டக்காரர் லயனல் மெஸ்ஸி தமது முதல் கோலை போட்டு, ஏற்கெனவே முதல் சுற்று ஆட்டத்தில் 0-1 எனத் தோல்வி கண்டு பின்னிலை அடைந்த யுனைடெட்டின் பயணத்தை மேலும் கடுமையாக்கினார். இதற்குப் பின் மான்செஸ்டர் யுனைடெட் அணி சுதாரித்துக் கொண்டு விளையாடும் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்த நான்காவது நிமிடத் தில் வழக்கமாக நம்பகமான கோல்காப்பாளராக விளங்கும் யுனைடெட்டின் டி கியா, நேற்று தம்மை நோக்கி சாதாரணமாக வந்த ஒரு பந்தை கோட்டைவிட பார்சிலோனாவுக்கு இரண்டாவது கோல் வெகுமதியாகக் கிடைத்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் இதுநாள்வரை பார்சிலோனாவுக்கு பெரிய அளவில் சாதிக்காத முன் னாள் லிவர்பூல் வீரர் ஃபிலிப்பே கொட்டின்யோ அபாரமாக ஒரு கோல் போட்டு யுனைடெட்டின் சாம்பியன்ஸ் லீக் கனவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார். யுனைடெட்டின் மார்க்கஸ் ரேஷ்ஃபர்ட் ஆட்டம் தொடங்கிய 40 வினாடிகளில் பார்சிலோனா வின் கோல் வலையை நோக்கி பந்தை உதைக்க அது கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. ஆனால் இதற்குப் பின் பார்சிலோனா குழு ஆட்டத்தை தனது முழுக்கட்டுப் பாட்டில் எடுத்துக்கொண்டதாக பிபிசி தகவல் கூறுகிறது. 1999ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் பயர்ன் மியூனிக் குழுவுக்கு எதிராக இறுதி கோல் போட்டு 2-1 என்ற கோல் கணக்கில் யுனைடெட்டுக்கு வெற்றி தேடித் தந்த தற்போதைய மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகி ஒலே குனார் சோல்சியாருக்கு நேற்றைய அலங்கோல ஆட்டம் மிகுந்த சோகத்தை தந்திருக்கும் என்பது நிச்சயம். அத்துடன், இனி வரும் ஆண்டுகளில் பிரிமியர் லீக் ஆட்டங்களாகட்டும், எஃப்ஏ கிண்ண அல்லது சாம்பியன்ஸ் லீக் ஆட்டங்களாகட்டும் திறமை வாய்ந்த மற்ற அணிகளை யுனைடெட் குழு வென்று தனது பழம் பெருமையைப் பெற வேண்டுமாயின் அது தற்போதைய வீரர்கள் பலரைக் கழற்றிவிட்டு புதிய வீரர்களை வாங்கி அவர்களை ஒரு தலை சிறந்த குழுவாக உருவாக்க வேண்டும் என்பதே இன்றைய நிலை. மற்றோர் ஆட்டத்தில் இத்தாலியின் யுவென்டஸ் குழுவை எதிர்கொண்ட அயக்ஸ் ஆம்ஸ்டர்டாம் குழு 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் யுவென் டஸை வீழ்த்தியது. யுவென்டஸுக்காக கிறிஸ்டி யானோ ரொனால்டோ முதல் கோலை போட்டாலும் அதன்பின் அயக்ஸின் டி லிக்ட் ஊக்கமளிக்க அந்த அணி இரண்டு கோல்கள் போட்டு யுவென்டஸை தோற்கடித் தது. இதில் தோல்வியின் விரக்தி யில் விளையாடிய கிறிஸ்டியானோ ரொனால்டோ தப்பாட்டம் காரண மாக இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று ஆட்ட மைதானத்தி லிருந்து வெளியேறியது குறிப் பிடத்தக்கது.