ஹைதராபாத்: டோனி இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர்கொண்டது. டோனிக்குப் பதில் சுரேஷ் ரெய்னா அணித் தலைவராக செயல்பட்டார். சாம் பில்லிங்ஸ் விக்கெட் காப்பாளராக விளை யாடினார். பூவா தலையா வென்ற சுரேஷ் ரெய்னா பந்தடிப்பைத் தேர்ந்தெடுத்தார். சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் கொடுத்த குடைச்சலில் சென்னை அணி தடம் புரண் டது. இதனால் ஓட்ட குவிப்பு ஒரேயடியாக மந்தமானது. சுரேஷ் ரெய்னா, கேதர் ஜாதவ் இருவரையும் ஒரே ஓவரில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் ரஷித் கான். 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய சென்னை அணி 5 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்களுக்குக் கட்டுப்படுத்தப் பட்டது.ஹைதராபாத் தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டும் நதீம், விஜய் சங்கர், கலீல் அகமது தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.பின்னர் களம் இறங்கிய ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னர் பின்னியெடுத்தார். அரைசதத்தை எட்டியபோது அவர் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஹைதராபாத் அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 137 ஓட்டங்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை அணிக்கு இது 2வது தோல்வியாகும்.
ஐபிஎல்: சென்னையை வீழ்த்தியது ஹைதராபாத்
1 mins read

