ராஜஸ்தானை ஓரங்கட்டிய டெல்லி அணி

ஜெய்ப்பூர்: இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட்  போட்டியில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி ஏழாவது வெற்றியைப் பதிவு செய்தது.

ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற டெல்லி அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் பந்தடித்த ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரகானே, சஞ்சு சாம்சன் ஆகியோர் களம் இறங்கி னார்கள். 

முதல் ஓவரின் இரண்டாவது பந்திலேயே ரகானே பவுண்டரி விளாசி ஓட்டக் கணக்கை தொடங்கினார். இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் சஞ்சு சாம்சன் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதனை அடுத்து, அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித், ரகானேவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் எதிரணி பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டனர்.

பவர்பிளேயில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டுக்கு 52 ஓட்டங்கள் எடுத்து இருந்தது. ரகானே 32 பந்துகளில் அரை சதத்தை கடந்தார். 

10.2 ஓவர்களில் அந்த அணி 100 ஓட்டத்தை எட்டியது. 31 பந்துகளில் அரை சதத்தைத் தொட்ட ஸ்டீவன் ஸ்மித் அடுத்த பந்திலேயே கிறிஸ் மோரிசிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் அப்போது அணியின் ஓட்ட எண்ணிக்கை 13.1 ஓவர்களில் 135 ஓட்டங்களாக இருந்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு ரகானே=ஸ்டீவன் ஸ்மித் இணை 130 ஓட்டங்கள் திரட்டியது.

அடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் 8 ஓட்டங்களுடனும் ஆஷ்டன் டர்னர் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து நடையைக் கட்டினார்கள். 

அதிரடியாக ஆடிய ரகானே 17வது ஓவரில் சதத்தை (58 பந்துகளில்) பூர்த்தி செய்தார். 

ஐபிஎல் போட்டியில் ரகானே அடித்த இரண்டாவது சதம் இது. 

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்கள் குவித்தது. 

அடுத்து பந்தடித்த டெல்லி அணி 19.2 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 193 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணியின் ரிஷப் பன்ட் 78 ஓட்டங்கள் எடுத்த ராஜஸ்தான் அணியை நிலைகுலைய வைத்தார்.

அவரது அதிரடி ஆட்டம் டெல்லியை வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்றது.

ஆட்டத்தில் கவனம் செலுத்தி தமது திறமை மீது நம்பிக்கை வைத்து சிறப்பாக விளையாடியதாக ரிஷப் பன்ட் ஆட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பெருமிதத் துடன் தெரிவித்தார். 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon