லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டியலில் கடைசி மூன்று நிலைகளில் வராமல் இருக்க வேண்டும் என்ற முனைப்புடன் களம் இறங்கியது பிரைட்டன் குழு.
எதிர்த்து ஆடிய டாட்டன்ஹேம் ஹாட்ஸ்பர்ஸ் (ஸ்பர்ஸ்) குழு விடவில்லை. வெற்றி பெற்றால் லீக் பட்டியலில் முன்னேறிச் சென்றுவிடலாம் என்று தெரிந்து களம் இறங்கியது ஸ்பர்ஸ் குழு.
தொடக்கம் முதலே தற்காப்பில் கவனம் செலுத்தியது பிரைட்டன். முதல் பாதி ஆட்டம் நேற்று முடிந்தது. இரண்டாம் பாதி ஆட்டத்தில் தனது வேகத்தைத் துரிதப்படுத்தியது ஸ்பர்ஸ் குழு.
பிரைட்டன் கோல் எல்லையை முற்றுகையிட்டது ஸ்பர்ஸ் குழு. கோல் முயற்சிகள் சரமாரியாக விழும் அம்புகள் போல விழுந்தன.
எனினும் பிரைட்டன் குழு தனது கோல் வலைக்கு முன்னால் சீனப் பெருஞ்சுவரையே எழுப்பி இருந்தது, தனது தற்காப்பின் மூலம். ஸ்பர்ஸ் குழுவின் பல கோல் முயற்சிகளை முறியடித்தது பிரைட்டன். ஸ்பர்ஸ் குழுவை எதிர்த்து வெற்றி பெறவில்லை என்றாலும் தோல்வி அடையாமல் இருந்தால் ஒரு புள்ளியாவது கிடைக்கும்.
ஆனால் வெற்றி பெற்றே ஆகவேண்டும் எனும் வேட்கை யுடன் தனது அணியில் பல முறை உத்திப்பூர்வ மாற்றங்களைச் செய்தார். அனைத்துக்கும் பலன் இல்லை. பிரைட்டனின் சீனப் பெருஞ்சுவர் பலமாக நின்றது.
ஆனால் ஆட்டம் முடிய இரண்டு நிமிடங்கள் இருக்கும் போது அந்தச் சுவரைத் தகர்த்தது ஸ்பர்ஸ்.
ஆட்டத்தின் 88ஆம் நிமிடத்தில் கிறிஸ்டியன் எரிக்ஸன் பிரைட்டன் கோல் எல்லையின் வெளியே இருந்து உதைத்த பந்து லாவகமாக வலையை முத்தமிட 1-=0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னிலைக்குச் சென்றது ஸ்பர்ஸ். அது எரிக்சன் எடுத்த 29ஆம் கோல் முயற்சி. ஆட்டமும் அதே கோல் கணக்கில் முடிய, லீக் பட்டியலில் நான்காம் இடத்தில் இருக்கும் செல்சி குழுவைவிட நான்கு புள்ளிகள் முன்னிலைக்குச் சென்றது ஸ்பர்ஸ். பிரைட்டனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. மொத்தம் 20 அணிகள் கொண்ட லீக் பட்டியலில் 17ஆவது இடத்திற்கு பிரைட்டன் தள்ளப்பட்டது.

