பார்சிலோனா: கைக்கு எட்டும் தூரத்தில் லீக் கிண்ணம்

பார்சிலோனா: கைக்கு எட்டும் தூரத்தில் லீக் கிண்ணம்

2 mins read

பார்சிலோனா: ஸ்பானிய லீக்கில் விளையாடும் அலவெஸ் குழுவை 2-=0 என்ற கோல் எண்ணிக்கையில் வீழ்த்தியதுடன் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றும் வாய்ப்புகள் பார்சிலோனாவுக்கு அதிகரித்­துள்ளன.

தற்போது ஸ்பானிய 'லா லீகா' போட்டியில் இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சியிருக்கின்றன. இந்நிலையில் லீக் பட்டியலில் இரண்டாம் நிலையில் இருக்கும் அட்லெட்டிக்கோ மட்ரிட்டைவிட 12 புள்ளிகள் வித்தியாசத்தில் முதல் இடத்தில் உள்ளது பார்சிலோனா.

எனினும் நேற்று பின்னிரவு நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் அட்லெட்டிக்கோ மட்ரிட் வெலென்சியாவிடம் தோல்வி கண்டால் இந்நேரம் லீக் கிண்ணத்தை வென்றிருக்கும். அப்படி இல்லையென்றால் வரும் சனிக்கிழமை ரியால் வெலடொலிட் குழுவுடனான ஆட்டத்தில் அட்லெட்டிக்கோ மட்ரிட் தோல்வி கண்டாலும் லீக் கிண்ணம் பார்சிலோனாவுடையதுதான்.

அடுத்த வாரம் இங்கிலாந்தைச் சேர்ந்த லிவர்பூல் குழுவுடன் சாம்பியன்ஸ் லீக் அரை இறுதி ஆட்டம் காத்துக்கொண்டு இருக்க நேற்று பின்னிரவு நடைபெற்ற ஆட்டத்தில் முன்னணி ஆட்டக்காரர்கள் லயனல் மெஸ்ஸி, ஜோர்டி அல்பா, ஆர்தர் ஆகியோர் இல்லாமல் களம் இறங்கியது பார்சிலோனா. எனினும் முதல் ஆட்டத்தில் கோல் ஏதும் இல்லை.

இரண்டாம் பாதி ஆட்டத்தின் 54ஆவது நிமிடத்தில் கார்லஸ் அலேனா அடித்த கோல் மூலம் முன்னணிக்குச் சென்றது பார்சிலோனா. அடுத்து பெனால்டி வாய்ப்பை கோலாக்கினார் சுவாரெஸ்.

பார்சிலோனா 2-=0 என்ற கோல் கணக்கில் முன்னணிக்குச் செல்ல ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் மெஸ்ஸி, அல்பா, ஆர்தர் மாற்று ஆட்டக்காரர்களாக திடலுக்கு வந்தனர்.

இம்முறை லீக் கிண்ணத்தை வென்றால் அது பார்சிலோனா வெல்லும் 26ஆவது லீக் பட்டமாக இருக்கும்.