விடாது ஓடிய கோமதி விரட்டி வந்த வெகுமதி

விடாது ஓடிய கோமதி விரட்டி வந்த வெகுமதி

3 mins read
fd05ca34-7d38-41a9-abff-1c37e05adcfc
தங்கத் தமிழச்சி கோமதி மாரிமுத்து, 30. -

திருச்சி மாவட்டம், திருவரங்கம் வட் டத்தில் சரியான சாலை, போக்குவரத்து வசதிகள் இல்லாத, பின்தங்கிய கிராமம் முடிகண்டம். ஐந்து கிலோமீட்டர் சென் றால்தான் மருத்துவ வசதியும் கிட்டும். இப்படி அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாதபோதும் இன்று இந்தியாவையே இந்த கிராமத்தை நோக்கி திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறார் தங்கத் தமிழச்சி கோமதி மாரிமுத்து, 30.

கடந்த வாரம் கத்தார் தலைநகர் தோஹாவில் நடந்த ஆசிய திடல்தட வெற்றியாளர் போட்டிகளில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் கோமதி. கடைசி 200 மீட்டர் தூரத்தில் அதிவேகம் காட்டிய இவர் பந்தய தூரத்தைக் கடக்க எடுத்துக்கொண்ட நேரம் 2 நிமிடம் 2.7 வினாடிகள். தனிப்பட்ட அளவிலும் இதுவே இவரது சிறந்த செயல்பாடு.

மாரிமுத்து-ராசாத்தி தம்பதியருக்கு ஒரு மகன், மூன்று மகள்கள். கடைக் குட்டியான கோமதிக்குச் சிறு வயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம். பள்ளி யில் படித்தபோது மாவட்ட அளவிலான போட்டிகளில் பரிசுகளைக் குவித்த இவர், திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரி யில் பட்டம் பயின்றபோதுதான் ஓட்டத் தில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.

தேசிய அளவில் வெற்றிகளைக் குவித்து வந்த நிலையில் அப்பா, பயிற்று விப்பாளர் என அடுத்தடுத்து நிகழ்ந்த இரு மரணங்களால் நிலைகுலைந்து போனார். அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல் இருந்தபோது அவரைத் தேற்றி, கைதூக்கிவிட்டார் திருவாட்டி ஃபிரான்சிஸ் மேரி. கல்லூரித் தோழியான இவர் சென்னையில் போக்குவரத்துத் துறையில் உதவி ஆய்வாளராக உள்ளார்.

தமக்கு முதுகெலும்பாக இருந்து, பொருளியல்ரீதியாகவும் உதவி, இந்தளவிற்கு உயர்த்தியது மேரி அக்காதான் என்கிறார் கோமதி.

சென்னை விமான நிலையத்தில் தம்மை வரவேற்கக் காத்திருந்த அவரைக் கண்டதும் கட்டிப்பிடித்து தமது அன்பை யும் நன்றியையும் கோமதி தெரிவித்துக் கொண்டது காண்போரை நெகிழ வைப்ப தாக இருந்தது.

தமக்கு உறுதுணையாக இருந்து வருவோருக்கும் வாழ்த்துக் கூறியோ ருக்கும் நன்றி தெரிவித்த கோமதி, "சொந்தக் காசில் விமானப் பயணச்சீட்டு வாங்கிதான் தோஹா சென்றேன். கிழிந்த '‌ஷூ'வை அணிந்துகொண்டு ஓடி, தங்கப் பதக்கம் வென்றதை என்னால் நம்பவே முடியவில்லை. பதக்க மேடையில் நின்றிருந்தபோது இந்திய தேசிய கீதம் ஒலித்ததைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனேன்," என்றார்.

தமிழக அரசு உதவும் பட்சத்தில் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன் என உறுதியுடன் கூறிய கோமதி, விளையாட் டில் சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு அரசாங்கம் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

கோமதி மாரிமுத்து, வரும் காலங்களி லும் முத்திரை பதிப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

'பெருமைப்படத் தந்தையில்லையே...!'

விவசாயக் கூலித் தொழிலாளி யாக இருந்தாலும் கோமதியின் விளையாட்டு ஆர்வத்திற்குத் தூண்டுகோலாக இருந்தார் அவரின் தந்தை மாரிமுத்து. அதிகாலையில் சைக்கிளில் அமர்த்தி, பயிற்சிக்கு அழைத்து சென்று வந்த தந்தை சில ஆண்டுகளுக்குமுன் இறந்துவிட் டார். இந்நிலையில், "மகளின் வெற்றியைப் பார்க்க அவ அப்பா இருந்திருக்கனும்," எனக் கலங் கினார் கோமதியின் தாயார் ராசாத்தி.

தமிழக அரசாங்கம் கட்டித் தந்த சிறிய தொகுப்பு வீட்டில் கோமதி வென்ற பதக் கங்கங்களை, கிண்ணங்களை வைக்கக்கூட போதிய இடம் இல்லை. போலிசாகப் பணிபுரி யும் அண்ணன் சுப்பிரமணி, தங்கை யின் எதிர்காலத்திற்காக பள்ளிப் படிப் புடன் நிறுத்திக்கொண்ட தமக்கையர் லதா, திலகவதி என குடும்பத்தினர் கோமதியின் வெற்றிக்குப் பின்னால் உள்ளனர் என்றால் அது மிகையில்லை. "நான் நன்றாகச் சாப்பிட வேண்டும் என்பதற்காக மாட்டுக்கு வைக்கும் உணவைக்கூட சாப்பிட்ட என் தந்தை இப்போது இல்லையே?" எனக் கதறி அழுதார் கோமதி.

பரிசுத்தொகை குவிகிறது

கோமதி வென்றதும் முதல் ஆளாக ஒரு லட்ச ரூபாய் பரிசு தருவதாக அறிவித்தார் நகைச்சுவை நடிகர் ரோபா சங்கர் (படம்). இப்போது திமுக

ரூ.10 லட்சமும் தமிழக காங்கிரஸ் ஐந்து லட்ச ரூபாயும் கோமதிக்குப் பரிசாக வழங்குவதாக நேற்று அறிவித்தன. படம்: டுவிட்டர் 2019-04-28 06:10:00 +0800