மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 'சூப்பர் ஓவரில்' வீழ்த்தி இரு புள்ளிகளைப் பெற்றதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி பன்னிரண்டாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 'பிளே ஆஃப்' சுற்றுக்கு முன்னேறியது.
ஹைதராபாத் அணி வீரர் மனீஷ் பாண்டே கடைசி பந்தில் சிக்சர் அடித்ததன் மூலம் ஆட்டம் சமனுக்கு வந்தது. இரு அணி களும் தலா 163 ஓட்டங்களை எடுத்தன.
இதையடுத்து, வெற்றியாளரை முடிவுசெய்ய 'சூப்பர் ஓவர்' முறை பின்பற்றப்பட்டது.
இலக்கை விரட்டியபோது ஆட்டமிழக்காமல் 71 ஓட்டங்களை விளாசிய பாண்டே, இம்முறை முதல் பந்திலேயே 'ரன் அவுட்' ஆனார். 2வது பந்தில் ஒன்று, 3வது பந்தில் சிக்சர் என ஏழு ஓட்டங்களை எடுத்த ஹைதராபாத் அணி 4வது பந்தில் முகம்மது நபியை இழந்தது.
இதனால் மும்பை அணி எட்டு ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. ஹார்திக் பாண்டியா முதல் பந்திலேயே சிக்சர் அடிக்க, அடுத்த இரு பந்துகளில் மேலும் மூன்று ஓட்டங்களைச் சேர்த்து மும்பை அணி வாகை சூடியது.
நெருக்கடியான சூழ்நிலையில் அபாரமாகப் பந்துவீசி எதிரணியின் ஓட்டக் குவிப்பைக் கட்டுப்படுத்திய ஜஸ்பிரீத் பும்ராவை வெகுவாகப் பாராட்டினார் மும்பை அணித் தலைவர் ரோகித் சர்மா.

