திட்டித் தீர்த்த தினேஷ்

திட்டித் தீர்த்த தினேஷ்

2 mins read

மொகாலி: ஐபிஎல் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றான கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக் கெதிரான போட்டியின்போது சக ஆட்டக்காரர்களைக் கடிந்து கொண்டதைக் கண்டு ரசிகர்கள் பெரும் வியப்படைந்தனர்.

பொதுவாகவே, திடலில் தமது அணியினர் தவறிழைக்கும்போது நிதானத்தைக் கைவிடாத தினேஷ் கார்த்திக், தன்னுடைய கோபத்தால் வீரர்களின் செயல்பாடு மேம்படும் பட்சத்தில் அதைத் தொடரவும் தயார் எனக் கூறியுள்ளார்.

வெற்றிபெற்றால்தான் 'பிளே ஆஃப்' சுற்று வாய்ப்பை உயிர்ப் புடன் வைத்திருக்க முடியும் என்ற நிலையில், பஞ்சாப் அணியை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் கோல்கத்தா அணி தோற்கடித்தது. மாறாக, ஆர் அஸ்வின் தலைமை யிலான பஞ்சாப் அணி தொடரை விட்டு வெளியேறியது.

முதலில் பந்தடித்த பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால் (36), நிக்கலஸ் பூரன் (48), சாம் குர்ரன் (55*) ஆகியோர் சிறப்பாக ஆடினர். இதையடுத்து, அந்த அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப் பிற்கு 183 ஓட்டங்களை எடுத்தது.

அடுத்து பந்தடித்த கோல்கத்தா அணிக்கு கிறிஸ் லின் - ‌ஷுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கம் தந்தது. அதிரடியாக ஆடிய லின் 22 பந்துகளில் 46 ஓட்டங்களை விளாசினார்.

அதன்பின் களமிறங்கிய ராபின் உத்தப்பா (22), ஆண்ட்ரே ரசல் (24) ஆகியோரும் அதிரடியைத் தொடர, கோல்கத்தா அணியின் ஓட்ட விகிதம் குறையவில்லை. மறுமுனையில் இளம் ஆட்டக்காரர் கில் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். கில் 49 பந்துகளில் 65 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் ஒன்பது பந்துகளில் 21 ஓட்டங்களையும் விளாச, இரண்டு ஓவர்கள் எஞ்சியிருந்த நிலையில் கோல்கத்தா வெற்றி பெற்றது.

நேற்றைய ஆட்டத்தில் ஹைத ராபாத் அணி வென்றிருந்தால், இன்றிரவு மும்பை அணியை நல்ல ஓட்ட விகிதத்துடன் கோல்கத்தா வெல்ல வேண்டியது அவசியம்.