லிவர்பூல் பாணியில் ஸ்பர்ஸ் வெற்றி

லிவர்பூல் பாணியில் ஸ்பர்ஸ் வெற்றி

3 mins read
c81b73c1-6c4a-4323-a5fb-b370cfa0c033
நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்பர்ஸ் குழுவுக்கு எதிராக கோல் போட்ட அயக்ஸ் குழு. படம்: ஏஎப்பி -

ஆம்ஸ்டர்டாம்: சாம்பியன்ஸ் லீக் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் சிங்கப்பூர் நேரப்படி நேற்று அதிகாலை ஹாலந்தின் அயக்ஸ் குழுவை எதிர்கொண்டது இங்கிலாந்தின் டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர் குழு.

இதில் முந்தைய நாளில்

ஸ்பெயினின் பார்சிலோனாவை இங்கிலாந்தின் லிவர்பூல் குழு வீழ்த்திய அதே பாணியில் ஸ்பர்ஸ் குழு அயக்ஸ் குழுவை வீழ்த்தியது.

நேற்றைய ஆட்டம் இரண்டாம் சுற்று ஆட்டம். முதல் சுற்று ஆட்டத்தில் அயக்ஸ் குழு 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது.

அத்துடன், நேற்றைய ஆட்டத்தின் முதல் பாதியில் அயக்ஸ் குழு ஸ்பர்ஸுக்கு எதிராக இரண்டு கோல்கள் போட்டு மூன்று கோல் எண்ணிக்கையில் முன்னணி பெற்றபோது, அயக்ஸ் குழு ரசிகர்கள் குதூகலத்தில் துள்ளிக்குதித்த வண்ணம் இருந்தனர்.

ஆனால், முந்தைய பார்சிலானோ­வுக்கு எதிரான ஆட்டத்தில் தனக்கு எதிராக மூன்று கோல்கள் போடப்பட்ட நிலையில் எழுச்சி பெற்று பதிலுக்கு இரண்டாம் சுற்று ஆட்டத்தில் நான்கு கோல்கள் போட்டு ஆட்­டத்­தின் போக்கை மாற்றி பார்சிலோனாவை போட்டியில் இருந்து துரத்திய லிவர்பூலைப் போல், நேற்று ஸ்பர்ஸ் குழு இரண்டாம் பாதி ஆட்டத்தில் பதிலுக்கு மூன்று கோல்கள் போட்டு அயக்ஸ் குழுவை மண்­ணைக் கவ்வ வைத்தது.

முதல் பாதி ஆட்டத்தில் அயக்ஸ் குழுவின் டி லிக்ட், ஸியெக் இருவரும் ஆட்டத்தின் 5ஆம், 35ஆம் நிமிடங்களில் கோல்கள் போடவே ஸ்பர்ஸ் குழு நெருக்கடிக்கு உள்ளானது.

ஆனால், லிவர்பூல் அணி பார்சிலோனாவுக்கு எதிராக 4 கோல்கள் போட்டதை நினைவில் கொண்ட ஸ்பர்ஸ் வீரர்கள், இரண்டாம் பாதி ஆட்டத்தில் சளைக்காமல் ஆடத் தொடங்கினர்.

இதில் ஸ்பர்ஸின் லுக்கஸ் மோரா இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஐந்து நிமிட இடைவெளியில், ஆட்டத்தின் 55ஆம், 59ஆம் நிமிடங்களில் சட்டு சட்டென்று இரண்டு கோல்கள் போட்டு சக வீரர்களுக்கு நம்பிக்கையூட்டினார்.

பின்னர், கூடுதல் நேரத்தில், ஆட்டத்தின் 96ஆம் நிமிடத்தில் அயக்ஸ் கோல் வலைக்கு 16 மீட்டருக்கு அப்பால் இருந்து பந்தை இலக்கு நோக்கி உதைத்து கோல் போட்டார்.

எதிரணியின் மைதானத்தில் போட்ட கோல்களுக்கு அதிக மதிப்பு என்ற அடிப்படையில் ஆட்டம் 3-3 என சமநிலை கண்டாலும் ஸ்பர்ஸ் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஸ்பர்ஸ் கோல்காப்பாளரும் அக்குழுவின் கேப்டனுமான ஹியூகோ லோரிஸ், லிவர்பூல் வீரர்கள் தங்களின் வெற்றிக்கு வழிவகுத்தனர் என்று கூறினார்.

இனி ஜூன் மாதம் முதல் தேதியன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இரு இங்கிலாந்துக் குழுக்களான லிவர்பூலும் ஸ்பர்­ஸும் மோதவுள்ளன.

ஸ்பர்ஸ் குழு தனது வரலாற்றில் முதன்முறையாக சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்திற்குத் தகுதி­ பெற்றுள்ளது.

ஸ்பர்ஸ் ரசிகர் திரு சுகுமார் கணபதி, அக்குழுவின் சரித்திரத்­தில் இது ஒரு சாதனை என்றார்.

இரண்டாம் பாதியில், இரண்டு தற்காப்பு ஆட்டக்காரர்களுக்குப் பதிலாக இரண்டு மத்தியத் திடல் மாற்று ஆட்டக்காரர்களை அறிமுகம் செய்தது ஸ்பர்ஸ் நிர்வாகியின் திறமையை வெளிக்­காட்டுகிறது என்றார் அரசாங்க ஊழியர் சுகுமார்.

கணினித் துறையில் பணி யாற்­­றும் திரு சீனிவாசன் சுப்பிர­மணியம், 27, அனைவரின் எதிர்­பார்ப்­பையும் இந்தக் குழு மிஞ்சியுள்ளது. ஏனெனில் போட்டி­யின் தொடக்கச்சுற்று ஆட்டங்களுக்கு அப்பால் ஸ்பர்ஸ் குழு முன்னே­றாது எனப் பலரும் கணித்திருந்தனர் என்றார். இறுதி ஆட்டத்தில் 2=1 என்ற கோல் கணக்கில் ஸ்பர்ஸ் குழு லிவர்பூல் குழுவை வெல்லும் என்பது அவரது கணிப்பு.

38 வயது அரசாங்க ஊழியர் திரு தியாகே‌ஷ் சுகுமாறன் ஸ்பர்ஸ் குழு சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தை வெல்லக்கூடும் என்றும் இரு குழுக்களும் சிறந்த தாக்குதல் ஆட்டக்காரர்களைக் கொண்டிருப்பதால் அதிக கோல்களை எதிர்பார்க்கலாம் என்றும் சொன்னார்.

கூடுதல் செய்தி: ப. பாலசுப்பிரமணியம்