ஓஸ்லோ: நார்வே நாட்டில் ஞாயிறன்று ராவ்ஃபஸ் காற்பந்துக் குழுவுக்கும் அந்நாட்டின் ஸ்கீட் குழுவுக்கும் இடையே நடைபெற்ற ஆட்டம் முடியும் தறுவாயில் இரு குழுக்களுக்குமிடையே கோல் எண்ணிக்கை 2--=2 என சமநிலையில் இருந்தது.
அப்பொழுது, சக வீரர்களுடன் இக்சான் எதிரணியினரின் பெனால்டி எல்லையில் இருந்தபோது, ராவ்ஃபஸ் அணியின் வீரர் ஒருவர் திடலின் வலப்பக்கத்திலிருந்து பந்தை ஸ்கீட் கோல் எல்லையிலுள்ள தமது சக வீரர்களை நோக்கி உதைத்தார்.
20 வயது மட்டுமே நிரம்பிய சிங்கப்பூரின் இக்சான், எதிரணியின் கோல் கம்பம் தமக்கு பின்னாலிருந்த நிலையில், பந்தை எதிர்கொள்ள எழும்பி தலைக்கு மேலே கால்களைக் கொண்டு சென்று தமக்குப் பின்பக்கமாகப் பந்தை உதைத்தார்.
அது கோல் வலையின் ஓர் ஓரத்தைப் பதம் பார்க்க, ராவ்ஃபஸ் குழுவுக்குக் கிடைத்தது மேலும் ஒரு கோல்.
இந்தக் குழு கடைசி நிமிட கோலுடன் ஆட்டம் முடிய ராவ்ஃபஸ் குழு 3-2 என்ற கோல் எண்ணிக்கையில் போட்டியை வென்றது.
இந்த ஆட்டத்தையும் சேர்த்து ராவ்ஃபஸ் குழு கடந்த நான்கு ஆட்டங்களில் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அத்துடன், நார்வேயின் இரண்டாம் நிலையிலுள்ள குழுவான ராவ்ஃபஸ் தரவரிசையில் நான்காம் இடத்தைப் பிடித் துள்ளது.
தரவரிசையின் முதல் இரண்டு குழுக்கள் முதல் நிலைக்கு தகுதி பெறுவதுடன் அதற்கு அடுத்த நிலையிலுள்ள மூன்றாம், நான்காம் வரிசைக் குழுக்கள் 'பிளே ஆஃப்' ஆட்டங்கள் மூலம் முதல் நிலைக்குத் தகுதி பெறும் வாய்ப்பு உள்ளதால் முதல் நிலைக்கு முன்னேறுவதில் ராவ்ஃபஸ் குழு முனைப்புடன் விளங்குகிறது.

