சாம்பியன்ஸ் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டிக்கு தடை விதிக்க பரிந்துரை

சுவிட்சர்லாந்து: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இங்கிலாந்து குழு­வான மான்செஸ்டர் சிட்டி பங்குபெறுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய காற்பந்து சம்மேளனம் நிதி நிர்வாக அதிகாரிகள் பரிந்­துரைக்கவுள்ளனர்.

ஜெர்மானிய சஞ்சிகை ஒன்றில், நிதி நிர்வாக விதி­ முறைகளை மான்செஸ்டர் சிட்டி பின்பற்றாதது தொடர்பில் செய்தி வெளியிடப்பட, ஐரோப்பிய காற்­பந்து சம்மேளனமும் இங்கிலி‌ஷ் பிரிமியர் லீக்கும் அது குறித்த புலனாய்வுப் பணியில் இவ்வாண்டு ஈடுபட்டன.

அவ்வாறு விதிமுறைகள் பின்­பற்றப்படாதது உறுதிசெய்யப்பட்டு அக்குழுவுக்குத் தடை விதிக்கப்பட்டால், அந்தத் தடைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய மான்செஸ்டர் சிட்டிக்கு அனுமதி வழங்கப்படும்.

2014ஆம் ஆண்டில், நிதி நிர்­வாக விதிமுறைகளைப் பின்பற்­றாத காரணத்தினால் ஐரோப்பிய காற்­பந்துச் சம்மேளனம், மான்செஸ்டர் சிட்டிக்கு 60 மில்­லியன் யூரோ அபராதம் விதித்தது. விளையாட்டாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்ட செலவுகள் வரம்புக்கு உட்பட்டதாக இல்லை என்பதும் ஐரோப்­பிய காற்பந்து சம்மேளனத்தின் குற்றச்சாட்டுகளில் ஒன்று.

தமது நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் ஜெர்மானிய சஞ்சிகை திட்டமிட்டு இதுபோன்ற செய்­தியை வெளியிட்டுள்ளது என்று மான்செஸ்டர் சிட்டி குழு தெரிவித்துள்ளது.