டப்ளின்: வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, பங்ளாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டப்ளினில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அயர்லாந்தும் பங்ளாதேஷ் குழுவும் மோதின.
பூவா தலையாவில் வென்ற அயர்லாந்து முதலில் பந்தடித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி சதமடித்தார்.
அவர் 130 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவருக்கு அணித் தலைவர் போர்ட்டர்ஃபீல்டு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார்.
போர்ட்டர்ஃபீல்டு சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 94 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், அயர்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 292 ஓட்டங்கள் எடுத்தது.
பங்ளாதேஷ் சார்பில் அபு ஜெயத் 5 விக்கெட்டுகளையும் முகம்மது சல்புதின் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
இதையடுத்து பந்தடிக்கத் தொடங்கிய பங்ளாதேஷ் அணி யின் பந்தடிப்பாளர்கள் பந்தை அனைத்து திசைகளிலும் பறக்கவிட்டனர்.
அவர்களது அதிரடி ஆட்டத் தைத் தடுக்க முடியாமல் அயர் லாந்து பந்துவீச்சாளர்கள் திக்கு முக்காடினர்.
பங்ளாதேஷ் 43 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 294 ஓட்டம் எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத் தில் அயர்லாந்தை வீழ்த்தியது. இதனால் அயர்லாந்து போட்டியை விட்டு வெளியேறியுள்ளது.
தமிம் இக்பால் 57 ஓட்டங்களும் லித்தான் தாஸ் 76 ஓட்டங்களும் ஷகிப் அல் ஹசன் 50 ஓட்டங்களும் எடுத்தனர். இன்று நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பங்ளாதேஷ் அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதுகின்றன.

