லீக் கிண்ணம், இங்கிலிஷ் பிரிமியர் லீக், எஃப்ஏ கிண்ணம் என இந்தப் பருவத்தில் இங்கிலாந்தின் ஆக மூன்று முக்கிய காற்பந்துத் தொடர்களிலும் மகுடம் சூடிய முதல் குழு என்ற சாதனையைப் படைத்த மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவினர் நேற்று முன்தினம் மாலையில் மான்செஸ்டர் நகரில் திறந்த பேருந்தில் வெற்றி ஊர்வலம் சென்றனர்.
தங்களது வெற்றி நாயகர்களைக் கண்டு, வாழ்த்தி, கொண்டாட்டத்தில் மூழ்கி, மகிழ்வதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சாலைகளின் இருபுறமும் திரண்டு இருந்தனர். வெற்றி அணிவகுப்பில் பேசிய சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா, "ஒயின் பானத்துடன் நன்றாக இரவு உணவருந்தி, இந்த வெற்றியைக் கொண்டாடுங்கள்," என்று ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார். "நாற்பது ஆண்டுகால ஏமாற்றத்திற்குப் பிறகு கிட்டிய அற்புதமான தருணம் இது," என்றார் சிட்டி குழுவின் ரசிகர்களில் ஒருவரான மைக் கான்லன், 76. படம்: ஏஎஃப்பி