கோஹ்லி: இந்திய ராணுவத்துக்காக உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும்

கோஹ்லி: இந்திய ராணுவத்துக்காக உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும்

2 mins read

மும்பை: நாட்டின் பாதுகாப்புக்காக அல்லும் பகலும் விழிப்புநிலையில் இருந்து பாடுபடும் இந்திய ராணுவத்துக்காக உலகக் கிண்ணத்தை வெல்ல வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் இந்தியா அதன் முதல் ஆட்டத்தில் ஜூன் 5ஆம் தேதியன்று தென்னாப்பிரிக்காவை எதிர் கொள்கிறது.

உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பு நாளை மறுநாள் நியூசி லாந்தையும் இம்மாதம் 28 ஆம் தேதி பங்ளாதேஷ் அணியையும் பயிற்சி ஆட்டத்தில் இந்தியா எதிர்த்து விளையாடு கிறது.

உலகக் கிண்ணத்துக்காக இந்திய அணி இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு மும்பை விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றது.

புறப்படுவதற்கு முன்பு இந்திய அணியின் தலைமை பயிற்று விப்பாளர் ரவி சாஸ்திரி, கோஹ்லி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர்.

''நீங்கள் ஏராளமான வகை களில் இருந்து உத்வேகத்தைப் பெறலாம். ஆனால், ஒரு விஷ யத்தை இங்கு சுட்டிக் காட்டுவது முக்கியம். இந்திய ராணுவத்தைப் பற்றி பேசும்போது, அதைவிடச் சிறந்த உத்வேகம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவர்கள் இந்திய நாட்டிற்காக செய்த தியாகத்தைப் பற்றி பேசும்போது, அதனுடன் வேறு எதையும் ஒப்பிட இயலாது.

"இதே உத்வேகத்துடன் நாம் சென்றால், ராணுவத்திற்காக ஏதாவது செய்ய முடியும். உயர்ந்த நிலை பேரார்வத்தை உங்களிடம் இருந்து வெளிப்படுவதைப் பார்க்கலாம். ஆனால், இதுவெல் லாம் ஏராளமான மற்ற காரணங் களையும் சார்ந்துள்ளது.

"உலகக் கிண்ணத்தில் விளை யாடும்போது ஒவ்வொரு வீரருக்கும் தனிப்பட்ட உத்வேகம் இருக்கும்.

ஒவ்வொருவரும் ராணுவத்தை மனதில் நினைத்தால், அதன்மூலம் கூடுதல் ஆற்றல் கிடைக்கும்'' என்றார் கோஹ்லி.

"முந்தைய உலக கிண்ணத்தை விட தற்போதைய போட்டி சவாலானதாக இருக்கும். 2015ஆம் ஆண்டைவிட தற்போது ஆப்கானிஸ்தான், பங்ளாதேஷ் அணிகள் வலுவானதாக உள்ளன.

"சவாலை முறியடித்துச் சிறப்பான ஆட்டத்தை இந்திய அணி வெளிப்படுத்தும்.

"இங்கிலாந்தில் ஆடுகளங்கள் பந்தடிப்புக்குச் சாதகமாக இருக்கும் எனக் கருதுகிறேன்.

"இந்திய அணியில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கின்றனர். நாங்கள் சவாலைப் பற்றி கவலைப் படாமல் சாதிப்பதை மட்டும் குறிக் கோளாக கொண்டுள்ளோம்.

"இந்திய அணியின் முன்னாள் தலைவர் டோனியின் ஆட்டம் இந்த உலகக் கிண்ணத்தின் பெரும் பங்கு வகிக்கும். அவரது சிறு செயல்பாடுகள்கூட போட்டி யின் ஆட்டத்தை மாற்ற கூடியது," என்றார் ரவி சாஸ்திரி.