மான்செஸ்டர்: கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன், மான்செஸ்டர் யுனைடெட் அணி ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்டத்தில் பயர்ன் மியூனிக் குழுவை வென்று கிண்ணத்தைக் கைப்பற்றியது.
அதே காற்பந்துப் பருவத்தில் எஃப்ஏ கிண்ணத்தையும் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கையும் வென்ற நட்சத்திர மான்செஸ்டர் யுனைடெட் குழு, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நேற்று முன்தினம் களமிறங்கியது.
மான்செஸ்டர் யுனைடெட்டின் அறநிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்கு நட்புமுறை ஆட்டத்தில் இவர்கள் முன்னாள் நட்சத்திரங்களைக் கொண்ட பயர்ன் மியூனிக் நட்சத்திரங்களுடன் பொருதினர்.
ஓல்ட் டிராஃபர்ட் அரங்கில் நடந்த இவ்வாட்டத்தில் மொத்தம் 61,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்துகொண்டு அந்தக் குழுவின் பொற்காலத்தை நினைவுகூர்ந்தனர்.
வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் நிர்வாகி சர் அலெக்ஸ் ஃபர்குசன் தலைமையில் யுனைடெட் போட்டியிட்டது.
முதல் கோலை அடித்தார் தற்போதைய யுனைடெட் குழு நிர்வாகியான சோல்சியார்.
அதற்கு பிறகு கோல் மழை பொழிய தொடங்கியது. முதல் பாதி முடிவதற்குள், டுவாய்ட் யொர்க் இரண்டாவது கோலை புகுத்தினார்.
இரண்டாம் பாதியில், நிக்கி பட், லுயிஸ் சாஹா மற்றும் டேவிட் பெக்கம் ஆகியோர் ஆளுக்குத் தலா ஒரு கோல் போட்டு 5=0 என்ற கோல் கணக்கில் யுனைடெட்டுக்கு வெற்றியை உறுதிச் செய்தனர்.
ஆட்டத்திற்கு பிறகு, யுனைடெட் குழுவில் விளையாடிய தற்காப்பு நட்சத்திரம் யப் ஸ்டாம், தற்போதைய யுனைடெட் குழுவை முன்னுக்கு எடுத்துச் செல்ல அதன் நிர்வாகி சோல்சியார்தான் சரியானவர் என்று கூறியிருந்தார்.

