லண்டன்: இந்தியாவின் பந்து வீச்சு பலம் வாய்ந்தது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியில் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகம்மது ஷமி, குல்தீப் யாதவ், சாஹல், ஹார்திக் பாண்டியா, விஜய் சங்கர், ஜடேஜா ஆகிய பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
இதில் பும்ரா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி வருகிறார்.
இந்தப் பருவத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பந்துவீச்சு பலம் வாய்ந்தது என இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.
''உலகக் கிண்ணத்தில் விளையாடும் இந்திய அணியின் பந்துவீச்சு பலம் வாய்ந்ததாக இருக்கிறது. வெவ்வேறு வகையில் வீசக்கூடிய திறமை வாய்ந்த பந்துவீச்சாளர்கள் அந்த அணியில் உள்ளனர்.
"வேகப்பந்தில் முகம்மது ஷமி, பும்ரா ஆகியோரும் சுழற்பந்தில் குல்தீப் யாதவும் சாஹலும் நேர்த்தியாக வீசக்கூடியவர்கள்'' என்றார் இயன் சேப்பல்.
இந்நிலையில், உலகக் கிண் ணத்தை வெல்லும் வாய்ப்பு இங்கிலாந்துக்கு அதிகம் இருப்ப தாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மொக்ராத் தெரிவித்துள்ளார்.
"இங்கிலாந்து மிகவும் சிறந்த ஒருநாள் போட்டி அணியாகும். என்னைப் பொறுத்தவரை உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும். அந்த அணி இந்த உலகக் கிண்ணப் போட்டியில் சிறப்பாக விளையாடுகிறது.
"இங்கிலாந்து அணிக்குக் கிண்ணத்தை வெல்ல நல்ல வாய்ப்பு இருக்கிறது என்று நான் முதல்முறையாகச் சொல்லுகிறேன்.
"அந்த அணியின் ஆட்டம் என்னை அதிகம் ஈர்த்து இருக்கிறது. அது தொடர்ச்சியாக அதிக ஓட்டங்களைக் குவித்து வருகிறது," என்றார் மெக்ராத்.

