இந்தியாவுக்கு சச்சின் எச்சரிக்கை

இந்தியாவுக்கு சச்சின் எச்சரிக்கை

1 mins read

லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கியது.

இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இதற்கிடையே, நாளை லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இந்திய அணி தனது இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை எதிர் கொள்கிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"கிரிக்கெட் விதிமுறைகளை மீறியதாக ஓராண்டுக்கு மேலாகக் கிரிக்கெட் விளையாடத் தடை விதிக்கப்பட்டிருந்த டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் மீண்டும் ஆஸ்திரேலிய அணி யில் இடம் பெற்றுள்ளனர். இதனால் ஆஸ்திரேலியா மிகப் பெரிய பலம் பொருந்திய அணியாக உள்ளது.

"அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் வார்னர் இந்தத் தொடரில் ஓட்ட வேட்டையில் ஈடுபட்டு வருகிறார். அந்த அணியினரின் பந்துவீச்சும் சிறப்பாக உள்ளது.

"ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமானது என்ப தால் இந்திய அணி வீரர்கள் எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும்," என்று சச்சின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணி இதுவரை விளையாடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுப் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.